Search This Blog

Saturday, April 14, 2018

பார்லர் படுத்தல்கள்


வெட்டினால் ‘Tony & Guy’-ல்தான் முடி வெட்டிக்கொள்வேன் என்கிறான் மகன்.  எங்கள் ஊரில் சின்ன வயதில் என் அப்பா ‘காதர்’ கடைக்கு முடி வெட்ட கூட்டிப்போவார்.  கபாலம் தெரியும் அளவுக்கு கத்திரி போடுவதில் காதர் பலே கில்லாடி.  எவ்வளவு ஓட்ட வெட்டினாலும் ‘இன்னும் கொஞ்சம் ஓட்ட வெட்டி இருக்கலாம், வெயிலுக்கு அதான் நல்லா இருக்கும்’ என டிசம்பர் மாதம் கூட சொல்வார். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நானே எனக்கு பிடித்த கடைகளில் முடி வெட்டிக் கொள்வேன். ரஜினி ரசிகனாய் கொஞ்ச நாள்  ஸ்டெப் கட்டிங்கில் இருந்தேன்.  தேவர் மகன் வந்த பிறகு கொஞ்ச நாள் பங்க் விட்டுக் கொண்டு அலைந்தேன்.  தலைக்கு heater போடும் ஒரு சுகானுபவத்தை அந்நாட்களில் ஒரு சில கடைகள் மட்டுமே தந்தன.  லக்னோவில் இருந்த நாட்களில் மரத்துக்கு கீழ் ஒரு நாற்காலி போட்டு ஐம்பது ரூபாய்க்கு அற்புதமாய் முடி வெட்டி விடுவார் ஒரு தாத்தா. மேலே போர்த்தும் துணி மட்டும் கொஞ்சம் கப் அடிக்கும்.  இருப்பினும் அதெல்லாம் பொருட்படுத்தாது முடி வெட்டிகொண்டால், பத்து நிமிடங்கள் கழுத்தையும் முதுகையும் ஒரு மசாஜ் செய்வார் பாருங்கள்.  ஆகா – ‘தாய்’ மசாஜ் எல்லாம் தோற்றுவிடும். 

சலூன் காலம் முடிந்து, salon ஆரம்பித்தது.  சார் – Stylist or Senior Stylist – என்று Salon பெண் கேட்டபொழுது எனக்கு ஒன்றும் புரியவில்லை.  சாதா  தோசை special தோசை போல் என்ன வேறுபாடு எனத்தெரியவில்லை.  ஒரு வழியாய் அதை செட்டில் செய்தபின், முடி வெட்டி முடிக்கும் வரை ஒவ்வோர் முடியாய் ஒரு scientist போல் கூர்மையாய் எடுத்து கவனித்து – முடிவில் அவர் கொடுக்கும் ஷாம்பூவை தேய்க்காமல் போனால், முடி இருந்ததற்கு அடையாளமே இருக்காது என்ற ரீதியில் பயமுறுத்தினார்.  அடுத்த தபா வாங்கிக்கிறேங்க என ஒருவாறு பேசி சமாளித்து வந்துவிட்டேன். 

‘சார் you son wants spike cutting.  I think it will suit him’-   சிக்கிமை சேர்ந்த Senior Stylist சொல்ல என் பையன் – ‘டாடி துப்பாக்கி விஜய் மாதிரியே பண்ண சொல்லுங்க டாடி’ என்றான்.  தேவர் மகனும், அண்ணாமலையும் ஓட்ட வெட்டுப்பா என்ற என் அப்பாவும் மனதிற்குள்.   பாத்துடா School-ல திட்டப்போறாங்க என்றபடி கிரெடிட் கார்டை நீட்டினேன்.  ‘ Its Okay Daddy.  Cool’ என்றான்.

வயதாகி விட்டதோ ???


No comments:

Post a Comment