Search This Blog

Friday, October 21, 2011

வறுமையின் வர்ணங்கள்

மழிக்கப் படாத முகம்
அடர்ந்த கண்கள்
கிழிந்திருந்த சட்டை

வறுமையை உடுத்திக் கொண்டு
பலூன் விற்றுக் கொண்டிருந்தான்

சிரித்தபடி
பலூன் ஊதி
சிரத்தையாய் நூல் கட்டி கொடுத்தான்

பத்து ரூபாய்க்கு
இரண்டு பலூன்
சிரித்தபடி கொடுத்தான் அந்த குழந்தைக்கு.
'இன்னும் இன்னும்' என்றபடி
அழுகின்றது அந்த குழந்தை

சிரித்தபடி
இன்னும் இரண்டு பலூன்களை
குழந்தை கையில் திணிக்கிறான்.
சிரிக்கிறது குழந்தை.

காருக்குள் இருந்த தகப்பன்
'பணம் வேஸ்ட், இரண்டு போதும்'
என்று குழந்தையை திட்டி
பலூன்களை பிடுங்கும்போது

அந்த பலூன்காரன்
பணம் வாங்காமல்
நகர்ந்தான்.

சிரிக்கிறது குழந்தை.

பலூன்களின் வர்ணம்
அவன் மீது வழிந்து
வறுமை நிறத்தை அழித்தது.

Thursday, October 20, 2011

கழகத்து கண்மணிகளுக்கு...


தமிழா !!
கம்பிக்கு பின்னே
கனிமொழி அல்ல
தமிழ் மொழி.

கவிதையை
சிறையெடுத்து
கதை செய்துவிட்டனர்

தமிழுக்கு
விலங்கிட்டு
தடை செய்துவிட்டனர்

சிறைபட்டு கிடக்கிறது
தமிழினத்தின்
தன்மானம்.

கொடுத்து சிவந்த கைகள்
வாங்கி சிவந்ததென
குற்றச்சாட்டு

திராவிட தர்மத்தின்
வாழ்வுதனை கவ்வியது
ஆரிய சூது.

பாஞ்சாலி துகிலுறிய
பாண்டவருமல்லவா
முனைகின்றனர்.

எறிவதற்கு சிலம்பும் இல்லை
எரிப்பதற்கு மதுரையும் இல்லை

‘நிதி’க்கும்
நீதிக்கும் போராட்டம்.
வீதிக்கு கொண்டாட்டம்.

கவிதை அருவியை
கைப்பைக்குள்
அடைக்க முடியுமா?

தீக்குச்சியை
தீப்பெட்டிக்குள் அடைக்கலாம்.
தீப்பொறியை அடைக்க முடியுமா?

முரண்


ஐந்து நட்சத்திர ஹோட்டல்.
ஐநூறு ரூபாய் உணவுக்கு 
ஐந்தாயிரம் விலை.
புன்னகைத்த பணியாளனக்கு
நூறு ரூபாய் கொடுத்து
காரைக் கிளப்பினேன்.

சிகப்பில் இருந்த சிக்னலில் 
கார் கண்ணாடி துடைத்து
சில்லறை கேட்டான் அழுக்குச் சிறுவன்.

பத்து ரூபாய்களை ஒதுக்கித் தள்ளி
இல்லாத சில்லறையை தேடுகையில் 
பச்சைக்கு மாறியது சிக்னல்.
சட்டென்று கியர் மாற்றி
சிறுவனை கடந்தேன்.

இரவு முழுவதும்
செரிக்காத ஹோட்டல் உணவும்
மறக்காத சிறுவன் முகமும் 
பாடுபடுத்தின....