Search This Blog

Saturday, April 21, 2012

உதிர்கின்ற பூக்கள்...




எனக்கும் பூக்கள் பிடிக்கும்
பறித்துச் சூட்டுவதற்கல்ல!
பார்த்து மகிழ்வதற்கு!

பூத்த வெட்கத்தில்
சிரித்துத் தலை சாய்க்கும் பூக்கள்!

கைக்கெட்டா வண்ணத்துப் பூச்சிகளை
அசையாது வசியமாக்கும் பூக்கள்!

மலர்ந்த பூக்களை
மரங்களில் பார்ப்பது அழகு!

பறிக்கப்படும் பூக்கள் எல்லாம்
மரணிக்கப்படுவதாய் படும் எனக்கு.

“பறிக்கப்படுவதற்கல்ல பூக்கள்” என
சட்டம் ஏதேனும் வரலாம் நாளை!
கற்பனை செய்தாலே கவிதை வாசம்!

பூத்துக் குலுங்கும் மரம் கொடிகள்
பூக்களின் வாசனை எங்கும் பரவும்
பூத்த பூக்கள் கொடிகளின் மேல்
உதிர்ந்த பூக்கள் பாதைகள் மேல்
அழுத்திக் காலடி வைக்க யோசிப்பான் மனிதன்
பூமித்தாய்க்கு வலிகள் குறையும்!

இயற்கையின் உற்சாகம்
மனிதனையும் பற்றிக்கொள்ளும்
வண்ணமயமாகும் உலகம்!!

கால ஓட்டத்தில்
கருத்துகள் மாறுகின்றன

இப்பொழுதும் பூக்கள் பிடிக்கிறது எனக்கு
பார்த்து மகிழ்வதற்கு மட்டுமல்ல
பறித்துக் கொடுப்பதற்கும் கூடத்தான்!

உனக்கு பூக்கள் சூடிக்கொள்ள பிடிப்பதால்
எனக்கு பூக்கள் பறிக்க பிடிக்கிறது

“உதிர்கின்ற பூக்கள் எல்லாம்
உதவாமலே போகின்றன”
ஏதேனும் உதவாக்கரை சமாதானம்
சொல்லிக்கொள்வேன் நான்
இளிக்கின்ற உள்மனதிடம்.

நொண்டி சமாதானங்கள்தான்
சில நேரங்களில்
வாழ்கையை வழி நடத்துகின்றன.

நீ சூடிக்கொள் காதலி
உனக்கு பிரியமான பூக்களை!

உன் கூந்தலில் இருப்பதுதான்
பூக்களுக்கு அழகு!!

இலக்கில்லா பயணங்கள்



 

இலக்கில்லா பயணங்கள்
இன்பம் தருபவன.

கொடுத்த வாக்குறுதிகள்
ஆற்ற வேண்டிய கடமைகள்
முடிக்க வேண்டிய வேலைகள்…
எதுவுமின்றி மெதுவாய் நகரும் பயணங்கள்!

மரங்களுக்குள் ஒளிந்துகொண்டு
தலை உயர்த்தும் மலைகள்!

பனித்துளி முத்தத்தின் மிச்சங்களோடு
வெட்கமாய் தலை சாய்க்கும் பூக்கள்!

அவசரமாய் இயங்கும் மனிதனை நோக்கி
ஏளனமாய் கூவும் பெயரறியா பறவைகள்!

கவலைகளற்று, கடந்து செல்வோருக்கு கைகாட்டும்
நட்பு புன்னகை பூண்ட சிறுவர் சிறுமியர்!

காதலி குணம் போன்று
அடிக்கடி மாறும் தட்பவெப்பம்!

சட்டென்று வயது குறைந்த ஓர் உணர்வு!
மேல்சட்டை கழற்றி எறிந்து
மான்களை துரத்தும் வேகம் மனதிற்குள்!

எல்லா இசைக்கருவிகளோடும்
ஓர் கச்சேரி உள்ளுக்குள்!
பொங்கி வழியும் இன்பம்!

நாளைய கவலைகள்
நேற்றைய துக்கங்கள்
எல்லாம் மறந்து
இன்றே வாழ்வின் கடைசி நாளாய்
கொண்டாடும் ஓர் உணர்வு!!

இலக்கில்லா பயணங்கள்
இன்பம் தருபவன.