எங்கள்
கிராமத்தில்.
பூட்டப்பட்டே
கிடக்கிறது
அந்த
வீடு
பல
வருடங்களாய்
“ஏன்
இந்த வீடு பூட்டியே கிடக்கிறது”
அப்பாவின்
கைப்பிடித்து
அந்த
வீடு கடக்கையில்
ஒவ்வொரு
முறையும் கேட்பேன்.
“ஊருக்கு
போயிருக்காங்க”
ஒற்றை
வாக்கியத்தில் முடிப்பார் அப்பா.
வாசலில்
நிற்கும் வேம்பும்
மணிகள்
வைத்த கதவும்
இரட்டை
திண்ணையும்
பின்பக்க
மாமரத் தோட்டமுமாய்
தனித்து
நிற்கிறது அந்த வீடு, மிக அழகாய்.
அந்த
வீடு பற்றி கேட்டாலே
எரிந்து
விழுவாள் அம்மா.
அப்பா
காதலித்த பெண்
அவ்வீட்டில்
இருந்ததும்,
சாதி
வெறியில் ஊரார்
அக்காதல்
கலைந்ததும்,
காதல்
சோகத்தில்
அப்பெண்
உயிர் துறந்ததும்,
மீளாத்
துயரில்
அவள்
பெற்றோர் ஊர் பிரிந்ததும்.
என்
கல்லூரி நாட்களில் தெரிந்தது.
நரைத்த
தலையும்
தடித்த
கண்ணாடியுமாய்
இன்றும்
அப்பா அந்த வீடு கடக்கிறார்.
ஒன்றும்
கேட்காமல்
மெதுவாய்
அவர் கைகளை
பற்றிக்
கொண்டேன்
இறுக்கமாய்
அதை பிடித்துகொண்டு
இடது
கையால் கண்கள் துடைக்கிறார்
எனக்கும்
அவருக்குமான
தலைமுறை
இடைவெளி சுருங்கி
அவ்வீட்டின் நிழழில் விழுந்தது.