சின்ன வயதில் என்னை இருமுறை நாய் கடித்த விஷயம் என் பையனுக்கு தெரியாது. “அப்பா ஒரு குட்டி
நாய் வாங்கி கொடுங்க” என்று பல முறை
அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான். ஒரு டிசம்பர் மாத காலையில், தூங்கி எழுந்து உடம்பை வளைத்து யோகாசனம் செய்து கொண்டிருந்த ஒரு தெரு நாயின்
வாலை லைட்டாக மிதித்ததற்கு, அது வடிவேல் பாணியில் அப்படியே ஷாக்காகி அரை கிலோ ஆடு சதையை ப்ரேக்
ஃபாஸ்ட் ஆக்கி கொண்டது. அந்த காலத்தில் நிஜமாகவே 16 ஊசி போட்டார்கள். “நாய பத்திரமா பாத்துக்கோ செத்து கித்து தொலைக்க போகுது” என்று உடனிருந்த scientist நண்பர்கள் சொல்ல, பல நாட்கள்
நாய்க்கு அட்டென்டன்ஸ்
எடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு சில வருடங்கள் கழித்து, நண்பன் வீட்டு பொமரேனியன் நாய்க்குட்டி யார் மீதோ இருந்த கோபத்தில், பொசுக்கென்று கடித்து வைத்தது. நாய் கடித்த வேதனையை விட, பிரிட்டானியா பிஸ்கட் எல்லாம் என் கையால் வாங்கி சாப்பிட்ட நாயின் நம்பிக்கை துரோகம், எதற்கு கடித்தது என்ற குழப்பம் மிக நாட்கள் வலித்தது.
[மனிதர்கள் கடிக்க ஆரம்பித்த பின்,பழகிவிட்டது]. இந்த நிகழ்வுகளுக்கு
பின், முதல் தெருவில் நாயார் அவர்கள் ரெஸ்ட் எடுக்கிறார் என்றால், பாட்ஷா ரஜினி போல்
மூன்றாம் தெரு வழியாக வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தேன்.
இந்த விஷயம் எல்லாம் பையனுக்கு சொல்லி, total இமேஜை டேமேஜ் செய்யாமல், நாய் எல்லாம் நான் வெஜிடேரியன் நம்ம வெஜிடேரியன் என்று ஒரு மாதிரியாய் சப்பை கட்டு கட்டினேன். Google, டிஸ்கவரி சேனல் என்று ஏதேதோ பார்த்து படித்து நாய்கள் என்ன சாப்பிடும், எப்படி பழக்க வேண்டும், எவ்வளவு குட்டிகள் போடும், குட்டியை விற்று எவ்வளவு சம்பாதிக்க முடியும், அதை வைத்தே அம்பானி அளவுக்கு பெரிய பணக்காரனாகி விடலாம் என்றெல்லாம் ஒரு கணக்கு சொன்னான். கணக்கில் 100/100
வாங்கு, காலை 5.30 மணிக்கு ஒரு மாதம் எழுந்திரு என்றெல்லாம் குலேபகாவலி ஸ்டைலில் பலவிதமான போட்டிகள் வைத்து, ஒரு ஒரு மாதிரியாக
நாய் விஷயத்தை தள்ளி வைத்தேன்.
சிங்கப்பூரில் ஒரு வீட்டில் இரண்டு நாய்கள் வைத்திருக்கின்றனர். நாய்களுக்கு அரசாங்கம் ஒரு மெடிக்கல்
சர்டிபிகேட் அளிக்கிறது. அதற்கென்று தனி டிபார்ட்மென்ட் வைத்திருக்கிறார்கள். நாயின் உடலுக்குள் ஒரு சின்ன சிப் ஒன்றை வைத்து, அந்த நாய் யாருடையது என்று தெரிந்து கொள்கிறார்கள். தெரு நாய்கள்
இதனால் இல்லை. நாய் கடித்தால், நாயின் ஓனர்
கதி அதோகதிதான். நாய் கக்கா போனால், கையில்
உறையுடன் அதை பாலிதீன் பையில் எடுத்து போட்டு குப்பை தொட்டியில் போடவேண்டும். மற்றபடி நாய்க்கு வருடம் ஒரு முறை மெடிக்கல் செக்கப் இன்சூரன்ஸ், PF, Gratutity என்றெல்லாம் இருக்கும் போலிருக்கிறது.
தெளிவாகத் தெரியவில்லை. மொத்தத்தில் இங்கு நாய் வைத்திருப்பதிற்கு பதிலாய், நம் ஊரில் ரெண்டு கறவை மாடு வாங்கி விடலாம்.
மகன் நேற்று திடீரென்று எனக்கு நாயெல்லாம் வேணாம்ப்பா. ஒரு Hamster வாங்கி கொடுங்க என்றான். Hamster என்றால் செஸ் லூடோ போன்று ஏதோ ஒரு போர்டு கேம் என்று நினைத்து அதுக்கு என்னடா ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிடு என்றேன். பிறகு தான் தெரிந்தது Hamster
என்பது ஒருவிதமான வெள்ளை பெருச்சாளி என்று. பிள்ளையார் பிடிக்க பெருச்சாளி ஆன கதை. இப்பொழுது பெருச்சாளி அவர்களை வீட்டிற்குள் வராமல் தடுக்க
, இந்தியன் கிரிக்கெட் டீமில் செலெக்ட் ஆகு, வாங்கி தருகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்
போல்.