Search This Blog

Sunday, August 9, 2015

தனிமை







துணையற்ற
தனிமை பக்கங்களில்
மௌனம் எழுதிச் செல்கிறது
வெறுமை வரிகளை.

விழுதல்















வெளிச்சத்தின் விளிம்பில்
விழுந்துவிடும் பயத்தோடு நான்
இக்கரை ஒளி
அக்கரை இருள்
எக்கரை விழுதல் என்பதும்
எது இருள் எது ஒளி என்பதும்
எனக்கு மட்டுமே வெளிச்சம்.
விழுதல் சாஸ்வதம்.

வெ(ற்)றிக் கொடிகள்

மெசப்படோமியாவில் ஆரம்பித்து
க்ருசேடுகளில் வளர்ந்து
ஜிகாதுகளில் பெருகி
காசாவில் காலூன்றிய நேற்று வரை..
எல்லா போர்களிலும்
அழுகிய பிணங்களின் மேல் ஒரு காலும்
அழுகின்ற முகங்களின் மேல் ஒரு காலும் வைத்து
மரணத்தின் வாடையோடு
குருதி தோய்ந்த கரங்களால் நடப்படுகின்றன
வெ(ற்)றிக் கொடிகள்.

மானுடம்

இடிக்கப்படுவது
மசூதியோ, மடாலயமோ, கோவிலோ
அடிக்கப்படுவது
இந்துவோ, முகமதியரோ, கிறித்துவரோ
மரிக்கப்படுவதும், புதைக்கப்படுவதும்
மானுடம் மட்டுமே.

பூட்டிய அறைக்குள்

பூட்டிய அறைக்குள்
எது வேண்டுமானாலும் நிகழலாம்
ஒரு ஆட்சியியை பிடிப்பதற்கான
ஆலோசனை கூட்டங்கள் நடக்கலாம்
ஒரு ஆட்சியை கவிழ்ப்பதற்கான
சதித் திட்டங்களாகவும் இருக்கலாம்
ஒரு காதலன் முதன் முறையாக
தனது காதலியை முத்தமிட்டுக் கொண்டிருக்கலாம்
ஒரு தாய் குழந்தைக்கு
முலைப்பால் ஊட்டிக்கொண்டிருக்கலாம்
பூட்டிய அறைக்குள்
எது வேண்டுமானாலும் நிகழலாம்
உயிரொன்று தனது கடைசி மூச்சினை
விடுவதற்காய் தவித்துக் கொண்டிருக்கலாம்
நோயாளியின் வேதனை தாளாது
சுவாசக் குழாயை யாரேனும்
கழற்றிக் கொண்டிருக்கலாம்
கடன் தொல்லை தாங்காது
ஏதேனும் ஒரு விவசாயி
தற்கொலை பற்றி
யோசித்துக் கொண்டிருக்கலாம்
மகளைப் பிரிந்த தந்தை ஒருவர்
யாருமறியாது கண்ணிர் வடித்துக் கொண்டிருக்கலாம்
பூட்டிய அறைக்குள்
எது வேண்டுமானாலும் நிகழலாம்
பூட்டப்பட்ட அறைக்கு உள்ளே நடக்கும்
விஷயங்கள் தெரிந்தாலும்
நடக்கும் சம்பவங்களின்
நீதி, அநீதி குறித்தோ
சரி, தவறு குறித்தோ
நியாய அநியாயம் குறித்தோ
கருத்துக்கள் ஏதுமின்றி நிற்கும்
ஒருவனின் முகம்
மிருகத்தின் முகமாய்
புத்தனின் கண்களோடு
பளிச்சென்று தெறிக்கிறது

அப்பாவின் அறை

அப்பாவின் அறை
அதிக பொருட்களின்றி
மிகச் சுத்தமாய் இருக்கிறது.
ஒரு கட்டில் மற்றும்
கலையாத படுக்கை விரிப்பு.
மேசை மேல்
தண்ணீர் பாட்டிலும்
கண்ணாடிக் கூடும்
காது மடிக்கப்பட்ட புத்தகமும்
ஒரு டார்ச் லைட்டும் இருக்கிறது
ஏழெட்டு சட்டை வேட்டிகள்
ஒரு கை கெடிகாரம்
சில ஸ்வெட்டர்கள்
நிறைய புத்தகங்கள்
தேதிவாரியாய் மடித்து வைக்கப்பட்ட செய்தித்தாள்கள்
1955ம் வருடத்தில் வாங்கிய பள்ளிக்கூட TC
பழைய அலுவலக கோப்புகள், காகிதங்கள்
க்யாரண்டி கார்டுகள்
கிறுக்கலான கையெழுத்தில் தபால்கள்
வங்கி வரவு புத்தகங்கள்,காசோலைகள்
1995ல் அச்சடித்த மகளின் திருமண பத்திரிக்கை
கொஞ்சம் பணம்
அந்த கால நாணயங்கள்
MGRஉடனான ஒரு புகைப்படம்
மாத்திரைகள்
மிகச் சிக்கனமாய் இருந்தது அந்த அறை.
ஒவ்வொரு பொருளாய், காகிதமாய் ஆராய்ந்து
தேவையற்றவை விலக்கி
காகிதங்கள் கிழித்து
குப்பைகள் களைய
நிர்வாணப்படுகிறோம்
நானும்
மறைந்துவிட்ட அப்பாவின் அறையும்.
கையில் துடைப்பமும்
கண்களில் கண்ணீருமாய்
நிற்கும் என்னை
புரியாமல் பார்க்கிறான்
என் சிறு வயது மகன்.

வாழ்தல் சுகம் (வசன கவிதை )


சிறகுகள் இனிமை.  பறப்பது சுகம் 
எங்கேனும் பறந்து செல். 
மலைகள் இருக்கட்டும் அவ்விடம் 
காலைகள் கவிதையாய் விடியட்டும் 
பேருந்து அலறல்களுக்கு பதிலாய்
பறவைகளின் பேச்சு உன்னை எழுப்பட்டும்

குளிப்பதற்கு ஏற்ப ஒரு ஓடை இருக்கட்டும் அங்கு
ஆறாய் இருப்பின் அதைவிட நலம்.
எங்கேனும் ஒரு அருவியும் இருக்கும் அங்கு.
அருவியில் நனைந்து இயற்கையை போற்று
பசித்தால் சாப்பிட பழங்கள் உண்டு
உணவிற்காய் அலைதல் தவிர். 

எப்பொழுதும் சிறகுகள் விரித்து பறக்காதே
அங்கும் இங்கும் செல்ல நல்லதொரு புரவி உண்டு 
புரவி ஓட்ட கற்றுக்கொள்; அதனோடு இணக்கமாகு
அதன் மார்பில் காது வைத்து, அதன் இதயத்துடிப்பு கேள்
புரவியை உனது நண்பன் ஆக்கிக்கொள் 



துணை தேடிக்கொள் அங்கு. 
வெறுமனே வானம் பார்த்தபடி
மலையை  வியந்தபடி
பறவைகள் பாஷை கேட்டபடி
பெய்யும் மழையில் நனைந்தபடி
அதிகம் பேசாது
அணைத்துக் கொள்ளும் துணையாய் தேடிக்கொள் 

 
கூடுதல் நலம்
உடலை புரிந்து கொள் 
உடல் வாயிலாய் மனதிற்குள் செல். 
ஒரு பூவின் மகரந்தமும்
ஒரு பூகம்பத்தின் அதிர்வும்
ஒன்றாய் உணர முடிகிறதா உன்னால். 
கூடல் சுகம் 

பொருள் அழியும்
பொருள் குறித்து பெருமை கொள்ளாதே
பொருள் இருப்பின் நலம்
பொருள் இல்லாதிருப்பின் அதைவிட நலம் 
பணம் குறித்த கவலைகள் அழி


அறிவினைத் தொழு
இயற்கையோடு இணக்கமாகு
கேள்விகள் கேள்
விடைகள் தேடி ஓடு

இயற்கையின் அதிசயங்கள்
குறித்து வியக்க முடிகிறதா உன்னால்
முல்லைக் கொடியின் வாசம்
தாமரையின் அழகு
நிலவின் அமைதி
பேரொளியின் திமிர்
மலைகளின் பொறுமை
பறவைகளின் நிறங்கள்
மிருகங்களின் சீற்றம்
இயற்கையை புரிந்து கொள்ள
முடிகிறதா உன்னால் ?
இயற்கைதான் கடவுளோ
என தோன்றுகிறதா உனக்கு  ?
கடலின் ஆழம்
வானின் நீளம்
அண்ட சராசரங்கள்
அக்னியின் ஆவேசம்
உன் அறிவின் சிறுமை
புரிகிறதா உனக்கு
இயற்கையை வணங்கு .

ஒரு மூங்கில் துளை
வழி வழியும் சங்கீதம் 
உன்னை சந்தோஷப்படுத்துமானால்
தெரிந்துகொள்
நீ வாழ்கிறாய் என. 


அந்த ஒரு கணத்திற்காய்...

ஒரு பழரசம் அருந்தும் சுகமாய்
என்னை
உன்னுள்
உறிஞ்சுகிறாய்..


ஓடிய மானை வீழ்த்தி
மூக்கினால் முகர்ந்து
நகங்களால் குதறி
நாக்கினால் சுவைக்கும் மிருகமாய்
என்னை உண்கிறாய் 

உண்ண உண்ண 
சுவையின் மிகுதியில் திளைக்கிறாய்
என்ன சுவை நான் என
எனக்கே நீ உரைக்கிறாய்
கைவிரல்கள் அருமை 
என அதையெல்லாம் உடைக்கிறாய்
கொஞ்சம் தாகம் என
வழியும் குருதி குடிக்கிறாய்

உண்ட களைப்பில் 
உறங்கும் உன்னை பார்த்தபடி
மீண்டும் வளர்கிறேன் நான்.

நாளையும் உனக்கு இரையாகும் 
இன்பம் பெறுவதற்காய் அல்ல

நாளையும் என் சுவை குறித்து
எனக்கு நீ உரைக்கும் 
அந்த ஒரு கணத்திற்காய்...


இரண்டுமற்றவர்கள்

மார் நிறைய முடி வளர்ந்த பின்னும்
மல்லிகை மீதான மோகமும்
புடவை மீதான காதலும்
தோடும், வளையலுமாய்
நாங்கள்
இரண்டுமற்றவர்கள்

உடலெங்கும் ஆணாய்
மனமெங்கும் பெண்ணாய்
ரௌத்திரம் பொங்கும் அன்போடு
இயங்குகிறது எமது உலகம்

எமது உரிமைக்காய் கதறும் 
குரல்வளைகள் மீது
உங்கள் எகத்தாள செருப்புகள் அழுந்துகிறது

எமது கண்ணீரைத் துடைக்கும்
கைகள் மீது
உங்கள் கேலி எச்சில் தெறிக்கிறது.

உங்கள் கேள்வி
எமது யோனி குறித்தே அமைகின்றன .
உங்கள் விசாரணை
விரசம் தோய்ந்தே இருக்கின்றன

எமது உலகின் இருட்டு
உங்களின் வெளிச்சம் பழகிய கண்களுக்கு
பல்லாண்டுகளாய் புரியவில்லை.

மெல்லிய திரையாய் கண் மறைக்கும்
அவமானம் எனும் இருட்டு
இங்குமின்றி அங்குமின்றி 
அப்புறப்படுத்தும் பயம் எனும் இருட்டு
குத்தீட்டி சொற்களால் 
மனதில் ஏற்படும் வலி எனும் இருட்டு

என்றும் எமது நாட்கள்
இருட்டாகவே விடிகின்றன.



இருட்டு உலகில்
எமது அழுகைச் சத்தம்
கூத்தாண்டவருக்கும் கேட்காதோ என
பலமாய் தட்டிக் கொண்டே இருக்கிறோம்

எமது கைகளை..