Search This Blog

Sunday, August 9, 2015

வாழ்தல் சுகம் (வசன கவிதை )


சிறகுகள் இனிமை.  பறப்பது சுகம் 
எங்கேனும் பறந்து செல். 
மலைகள் இருக்கட்டும் அவ்விடம் 
காலைகள் கவிதையாய் விடியட்டும் 
பேருந்து அலறல்களுக்கு பதிலாய்
பறவைகளின் பேச்சு உன்னை எழுப்பட்டும்

குளிப்பதற்கு ஏற்ப ஒரு ஓடை இருக்கட்டும் அங்கு
ஆறாய் இருப்பின் அதைவிட நலம்.
எங்கேனும் ஒரு அருவியும் இருக்கும் அங்கு.
அருவியில் நனைந்து இயற்கையை போற்று
பசித்தால் சாப்பிட பழங்கள் உண்டு
உணவிற்காய் அலைதல் தவிர். 

எப்பொழுதும் சிறகுகள் விரித்து பறக்காதே
அங்கும் இங்கும் செல்ல நல்லதொரு புரவி உண்டு 
புரவி ஓட்ட கற்றுக்கொள்; அதனோடு இணக்கமாகு
அதன் மார்பில் காது வைத்து, அதன் இதயத்துடிப்பு கேள்
புரவியை உனது நண்பன் ஆக்கிக்கொள் 



துணை தேடிக்கொள் அங்கு. 
வெறுமனே வானம் பார்த்தபடி
மலையை  வியந்தபடி
பறவைகள் பாஷை கேட்டபடி
பெய்யும் மழையில் நனைந்தபடி
அதிகம் பேசாது
அணைத்துக் கொள்ளும் துணையாய் தேடிக்கொள் 

 
கூடுதல் நலம்
உடலை புரிந்து கொள் 
உடல் வாயிலாய் மனதிற்குள் செல். 
ஒரு பூவின் மகரந்தமும்
ஒரு பூகம்பத்தின் அதிர்வும்
ஒன்றாய் உணர முடிகிறதா உன்னால். 
கூடல் சுகம் 

பொருள் அழியும்
பொருள் குறித்து பெருமை கொள்ளாதே
பொருள் இருப்பின் நலம்
பொருள் இல்லாதிருப்பின் அதைவிட நலம் 
பணம் குறித்த கவலைகள் அழி


அறிவினைத் தொழு
இயற்கையோடு இணக்கமாகு
கேள்விகள் கேள்
விடைகள் தேடி ஓடு

இயற்கையின் அதிசயங்கள்
குறித்து வியக்க முடிகிறதா உன்னால்
முல்லைக் கொடியின் வாசம்
தாமரையின் அழகு
நிலவின் அமைதி
பேரொளியின் திமிர்
மலைகளின் பொறுமை
பறவைகளின் நிறங்கள்
மிருகங்களின் சீற்றம்
இயற்கையை புரிந்து கொள்ள
முடிகிறதா உன்னால் ?
இயற்கைதான் கடவுளோ
என தோன்றுகிறதா உனக்கு  ?
கடலின் ஆழம்
வானின் நீளம்
அண்ட சராசரங்கள்
அக்னியின் ஆவேசம்
உன் அறிவின் சிறுமை
புரிகிறதா உனக்கு
இயற்கையை வணங்கு .

ஒரு மூங்கில் துளை
வழி வழியும் சங்கீதம் 
உன்னை சந்தோஷப்படுத்துமானால்
தெரிந்துகொள்
நீ வாழ்கிறாய் என. 


No comments:

Post a Comment