Search This Blog

Wednesday, August 29, 2012

கரைகின்ற கரைகள்

எகிறிக் குதித்து
கதறி அழுது
கட்டி அணைத்து
கரைகளை
அழைத்துக் கொண்டே
இருக்கிறது அலைகள்

விட்டுத் தொலைத்து
விலகி நடந்து
அலைகளோடு இணக்கமாக
கரைகளுக்கென்னவோ ஆசைதான்
நிலமென்னும் பந்தம்
இடையில் நிற்கும்

கரைதனில் 
கரம் வைத்துப் பார்க்க
அலைகளின் துளிகள்
அலைகளை 
அலசிப் பார்க்க
கரைகளின் துகள்கள்

ஒன்றுக்கொள் ஒன்றாய்
கலந்த பின்னும்
ஒட்டாது நிற்கும்
கரைகளும் அலைகளும்

அலைகளின் அழுகை
துவர்ப்பாய் மாற்றியது கடலை

இயற்கையின் நியதியால்
சேராது நிற்கும்
கரைகளும் அலைகளும்
ஆண்டாண்டு காலமாய்

கரைகளின் தலை மேல் கால் வைத்து
அலைகளின் கைகளை மிதிக்கிறான்
மனிதன் 
சிரித்துக்கொண்டே.


Friday, August 17, 2012

குழந்தையும் தெய்வமும்...


இறைவா…இறைவா
என்செய நினைத்தாய்
எமது குழந்தைகளை.

பூப்பதற்கு முன்னால்
எதற்கு பறிக்கிறாய்
இந்த பிஞ்சுகளை

உனது பன்னிரு முகங்கள்
பல்லாயிரம் விழிகள் கொண்டு
சற்றே உற்றுப்பார்

எடுப்பதற்கும் பறிப்பதற்கும்
ஆயிரம் உண்டிங்கு
உதவாக்கரை உயிர்கள்

களைவதற்கும் கொய்வதற்கும்
இந்த மலராத பூக்கள்
எதற்கு உனக்கு

அக்கினியை அனுப்பி
மொத்தமாய் பொசுக்குவதும்
வாழைப்பழத்தினால்
வாயை அடைப்பதும்
ஓடும் பேருந்தில்
ஓட்டைகள் விழுவதும்
நீச்சல் குளத்தில்
ஜலசமாதி நிகழ்வதும்

இன்னும்
எத்தனை குழந்தைகள்
வேண்டும் உனக்கு

உமது குழந்தைகள்
ஞானப்பழத்திற்காய் உலகம் சுற்ற
எமது குழந்தைகள்
வாழைப்பழத்தினால் உலகம் துறப்பதா

இவைகளும் உனது திருவிளையாடல் எனில்
சற்றே நிறுத்திக்கொள்
உனது அசட்டு விளையாட்டை

written after the various freaky accidents involving the killing of school kids in chennai - 17/08/2012...