Search This Blog

Wednesday, April 19, 2017

மீண்டும் ஒரு முறை

மீண்டும் ஒரு முறை

அந்த சிரிப்பினை அணிந்து கொள்

மீண்டும் ஒரு முறை

உன் மது கோப்பையினை உயர்த்து

மீண்டும் ஒரு முறை

அந்த இசைத்தட்டை சுழலவிடு

மீண்டும் ஒரு முறை

உன் கேள்வியினை கேள்

மீண்டும் ஒரு முறை

உன் காதல் சொல்

மீண்டும் ஒரு முறை

அந்த முத்தம் கொடு

மீண்டும் ஒரு முறை 

வெட்கம் அவிழ்

மீண்டும் ஒரு முறை

பயம் விலக்கு

மீண்டும் ஒரு முறை

உன் கனவுகள் சொல்

மீண்டும் ஒரு முறை

இரவில் நடனமிடு

மீண்டும் ஒரு முறை

கடற்கரையில் கை கோர்த்து நட

மீண்டும் ஒரு முறை

கண்ணீரோடு பார்

மீண்டும் ஒரு முறை

கவிதைகள் படி


மீண்டும் ஒரு முறை

நீ நீயாக இரு.

Sunday, April 16, 2017




ஓடும் நீரில் கால் வைத்தபடி
நிலவினை பார்க்கும் தருணங்களில் எல்லாம்
உன் முத்தங்கள் நினைவுக்கு
வருவது ஏன் ?
உடம்பிலிருந்து வெட்டுண்ட
பல்லியின் வாலொன்று
துடித்துக்கொண்டிருக்கிறது.
வெட்டுண்ட வலியா
விடுபட்ட வேதனையா
மீண்டும் இனணயத் துடிக்கும் தவிப்பா.
செய்வதறியாது பார்த்துக்கொண்டிருக்கிறேன் .
"ம்...பார்க்கலாம்" என்ற ஒற்றை சொல்லில்
விடுபட்டு சென்ற நீ
இன்று கனவில் வரப்போகிறாய்.  


ஒற்றை சொல்லொன்று
வந்தடையாத வலியில்
இத்தனை இரைச்சல்களுக்கு இடையிலும்
மவுனத்தில் அமிழ்கிறது

அந்நாள்
ஓயாமல் என்னுள்
ஒலிக்கும் யாழினை
மீட்டுதல் நீயா

தீராமல் என்னுள்
ஓடும்  நதியின்
ஊற்றுக்கண் நீயா

நான் சொல்லாமல்
விட்டுவிட்ட சொற்களின்
சப்தங்கள்  நீயா

விடை இல்லாமல்
போகின்ற கேள்விகளின்
பதில்களும் நீயா

நான் எழுதாமல்
தவறவிட்ட கவிதைகளின்
அர்த்தங்கள் நீயா

நில்லாமல் என்னுள்
ஓடும் காலத்தின்
அச்சாணி நீயா...






என் கவிதைகளில் நீ இல்லை

உன்னுள் இருக்கிறது என் கவிதைகள்


இருள்
இருளைக் காட்டிலும்
பயங்கரமாய் இருக்கிறது
பயத்தினால்

ஒளி
ஒளியை காட்டிலும்
பிரகாசமாய் இருக்கிறது
தெளிவினால்

மற்றபடி
இருளும்
ஒளியும்
ஒன்றே.

பயமும்
தெளிவும்
ஒன்றே

மனம் மட்டுமே வெவ்வேறாய் .


நீ எனும் வாசனை திரவியத்தை
மனமெங்கும் தடவிக்கொண்டு
அதன் நறுமணம் யாருக்கேனும்
தெரிந்துவிடுமோ என
பயத்திலேயே அலைகிறேன் நான்.

 இனி காதல் கவிதைகள் எழுதவதில்லை
என முடிவெடுத்த நாளொன்றில்
நாம் கடைசியாய் முத்தமிட்டுக்கொண்டோம்

பூக்களின் மேல்
கைவைப்பது போல்
மிக மென்மையாய் கை குலுக்கி
முட்களின் மேல் 
கால் வைப்பது போல்
தரையில் பட்டும் படாமல் நகர்ந்தாய்

ஒரு ஒற்றை நட்சத்திரம்
மிக அதிகமாய் ஒளிர்வது 
பார்த்தபடி நெடு நேரம் அமர்ந்திருந்தேன்

கவிதைகளற்ற உலகின்
இருட்டு மவுனம் 
பயமுறுத்தியது

சிணுங்கி ஒளிர்கிறது
அந்த ஒற்றை நட்சத்திரம்
இருட்டு மவுனம் கலைத்தபடி.

ஒற்றைத் துளியாய்



தீராக்காதலின்
ஒற்றை முத்தமாய்

அளவில்லா மகிழ்ச்சியின்
ஒற்றை சிரிப்பாய்

ஓயாத போராட்டத்தின்
ஒற்றை முழக்கமாய்

விடியாத இரவின்
ஒற்றை வெளிச்சப் பொட்டாய்

முடிவில்லா கானகத்தின்
ஒற்றை பெருமரமாய்

மீளாத்துயரின்
ஒற்றை கண்ணீர்த் துளியாய்

ஏதேனும் ஒன்றாய்
அமையட்டும்
என் கவிதை.

முடிவற்ற முற்றுப்புள்ளிகள்



அந்த கடிதத்தை
மூன்றாவது முறையாக படித்தேன்

வரிகள் வலுவிழந்ததாய்
வார்த்தைகள் அர்த்தமற்றதாய் தோன்றின

கிழித்து தூக்கி எறிய
முடிவு செய்த தருணம்
கடைசி வரியின் முற்றுப்புள்ளி தடுத்தது

வெறும் புள்ளியாய் இல்லாமல்
ஒரு சிறிய வட்டமாகவும்
அந்த கடிதத்தின் வார்த்தைகள் கரைந்து
அந்த வட்டத்துள்
கருப்பு மையாகவும் அடைத்திருந்தது

அந்த கடிதத்தில் இருந்த
ஒரே ஒரு முக்கிய விஷயமாய்
அர்த்தமுள்ள பொருளாய்
அந்த முற்றுப்புள்ளி இருந்தது

இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை என
அந்த புள்ளி உரைக்கிறது
அழுத்தம் திருத்தமாய்.

ஒரு உறவின் முடிவை
ஒரு தொடர்கதையின் முடிவை
ஒரு பதிலின் முடிவை
ஒரு சிரிப்பின் முடிவை
ஒரு நட்பின் முடிவை
ஒரு காதலின் முடிவை
ஒரு மகிழ்ச்சியின் முடிவை
ஒரு முற்றுப்புள்ளி முடிவு செய்கிறது

வந்த கடிதத்திற்கு பதிலாய்
வெள்ளை காகிதத்தில்
ஒரே ஒரு பெரிய முற்றுப்புள்ளி இட்டு
கடிதம் எழுதியவரின் விலாசம் எழுதி
தபாலில் மட்டும் சேர்க்க மனதின்றி
இரண்டு முற்றுப்புள்ளிகளையும்
ஒன்றாய் ஒரே உறையில் இட்டு
இன்றும் வைத்துள்ளேன்.




அப்பாவின் முகங்கள்




அப்பாவின் நினைவுகள்
தூக்கத்தை குடித்து
இரவை துப்பிகொண்டிருந்தது

தீபாவளி பட்டாசுகள்
திண்பண்டங்கள்
கொண்டாட்டங்கள்
எதேனும் தவறு செய்தால்
‘சின்ன பையன் விடு’
என சொல்லும் பெருந்தன்மை.
சிறு வயதில் சந்தித்த
அன்பு முகம்

பின்னொரு நாள்
வேலை இழந்து
சட்டென்று  வாழ்க்கை திசை மாற
அப்பா அணிந்துகொண்ட
ரௌத்திர முகம்
இயலாமை முட்கள் கீறி
கோரமான கோப முகம்
வறுமை வழிந்த
வருத்த முகம்
அம்மாவை அடித்த
அசிங்க முகம்
பதினைந்து வயது மகன்
கட்டை உருவி அடிக்க நின்றபொழுது
வெட்கப்பட்ட முகம்

விபத்தொன்றில் வலிமை இழந்து
படுக்கையில் வீழ்ந்த
பலவீன முகம்

வருடங்கள் ஓட
வீட்டுக்குள் அடைபட்டு
கோபங்கள் குறைந்து
தன்னைத்தானே வருத்திக்கொண்டு
மீண்டும் வெளிப்படுத்திய
அன்பு முகம்.

மருத்துவமனையில்
இறுதி நாட்களில்
பேச முடியாமல்
வலியின் பிடியில்
கண்ணீரோடு இருந்த
கருணை முகம்.

அப்பா நண்பனாக இல்லாத கோபம்
அப்பா நல்ல தகப்பனாய் இல்லாத வெறுப்பு
அப்பா நல்ல கணவனாய் இல்லாத வருத்தம்

இத்தனை வெறுப்பும்
கோபமும் வருத்தமும்
ஒற்றை கண்ணிர் துளியில்
என்றோ கரைந்தது

அன்பின் தாள் உடைந்து
பெருக்கெடுக்கும் வேளையில்
பேச்சற்று நான்
முச்சற்று அவர்

‘என் அன்பின் ஆழம்
உனக்கு புரிகின்ற தினமொன்றில்
நான் வலிகளற்றிருப்பேன்
என்னை தொடுவதற்கு
நீ வழிகளற்றிருப்பாய்’
அப்பாவின் குரல் அறையெங்கும்

நான்
இன்று

அழப்போகிறேன்.