அந்த கடிதத்தை
மூன்றாவது
முறையாக படித்தேன்
வரிகள் வலுவிழந்ததாய்
வார்த்தைகள் அர்த்தமற்றதாய் தோன்றின
கிழித்து தூக்கி எறிய
முடிவு செய்த தருணம்
கடைசி வரியின் முற்றுப்புள்ளி தடுத்தது
வெறும் புள்ளியாய் இல்லாமல்
ஒரு சிறிய வட்டமாகவும்
அந்த கடிதத்தின் வார்த்தைகள் கரைந்து
அந்த வட்டத்துள்
கருப்பு மையாகவும் அடைத்திருந்தது
அந்த கடிதத்தில் இருந்த
ஒரே ஒரு முக்கிய விஷயமாய்
அர்த்தமுள்ள பொருளாய்
அந்த முற்றுப்புள்ளி இருந்தது
இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை என
அந்த புள்ளி உரைக்கிறது
அழுத்தம் திருத்தமாய்.
ஒரு உறவின் முடிவை
ஒரு தொடர்கதையின் முடிவை
ஒரு பதிலின் முடிவை
ஒரு சிரிப்பின் முடிவை
ஒரு நட்பின் முடிவை
ஒரு காதலின் முடிவை
ஒரு மகிழ்ச்சியின் முடிவை
ஒரு முற்றுப்புள்ளி முடிவு செய்கிறது
வந்த கடிதத்திற்கு பதிலாய்
வெள்ளை காகிதத்தில்
ஒரே ஒரு பெரிய முற்றுப்புள்ளி இட்டு
கடிதம் எழுதியவரின் விலாசம் எழுதி
தபாலில் மட்டும் சேர்க்க மனதின்றி
இரண்டு முற்றுப்புள்ளிகளையும்
ஒன்றாய்
ஒரே உறையில் இட்டு
இன்றும்
வைத்துள்ளேன்.
No comments:
Post a Comment