Search This Blog

Friday, October 26, 2012

தலையில் 
தீ வைத்துக்கொண்ட 
சர வெடியின்
படபடப்பாய்
மனமெங்கும் பரவுது
உன் பிரிவின் வலி

Sunday, October 14, 2012




இங்கு சரியென்றும் தவறென்றும்
எதுவும் இருப்பதாய்
தெரியவில்லை எனக்கு

பார்க்கின்ற பார்வைகளும்
இருக்கின்ற இடங்களும்
நிர்ணயிக்கின்றன
சரி தவறுகளை

சில சரியான தவறுகளும்
சில தவறான சரிகளும்
கவனிக்கப்படாமல்
நித்தம் நடக்கின்றன

உங்கள்
சரிக்கும் தவறுக்கும்
இடையிலான
மெல்லிய கோட்டில்
பயணிக்கிறேன் நான்.

விழும் வரை சரியானவனாகவும்
விழுந்த பின் தவறானவனாகவும்
கணிப்பீர்கள் என்னை.

என் பயணத்தின் இனிமையை
ரசித்தபடி நடக்கிறேன்
விழுவதும் எழுவதும்தான்
என் பயணம்.

Tuesday, October 2, 2012

என் அன்பின் ஆழம்
உனக்கு புரிகின்ற தினமொன்றில்
நான் வலிகளற்றிருப்பேன்.
என்னை தொடுவதற்கு 
நீ வழிகளற்றிருப்பாய்.

வயிறு வீங்கி
ஏழெட்டு குட்டிகள்
ஈன்றன அந்த தெரு நாய்

குட்டி நாய்களின்
சத்தமும், அதன் அசிங்கங்களும்
முகம் சுளிக்க வைத்தன 
அடுக்கு மாடி குடியிருப்பின்
மத்தியமர்களை

எங்கேனும் அதன் மீது
வாகனம் ஏறி விடுமோ
என்ற பயத்தோடு பார்பேன் நான்

மரத்தடியில் 
ஒரு அட்டை பெட்டி வீட்டில்
அடைக்கலமாகின நாய்கள்

மீந்த தயிர் சாதம்
கெட்டுப் போன பால்
அவ்வப்போது கிடைக்கும் வறுக்கி
நாளொரு வலியும் பொழுதொரு அடியுமாய்
வளர்ந்தன அந்த நாய்கள்

இறந்தது போக
மிஞ்சிய நாய்களுக்கு
ஆங்கில பெயர் வைத்தான் 
என் நாலு வயது மகன்

காம்ப்ளான், முந்திரி, கைமுறுக்கு
கையில் கிடைப்பவை அனைத்தும்
நாய்களுக்கு பங்கு

பள்ளி செல்கையில் 
நாய்களுக்கு கையசைப்பதும்
பள்ளி முடிந்தபின்
நாய்களிடம் பேசுவதுமாய்
நாட்கள் கழிந்தன அவனுக்கு

மழை நாட்களில்
நாய்கள் பற்றிய கவலையோடு
ஆளில்லாத  பகலொன்றில்
படுக்கையறையில் நாய்கள்
கூட்டி வந்து உறங்கினான்

வேகமாய் வளர்ந்த நாய்கள்
தெரு விட்டு தெரு சென்று
பல நாட்கள் கழித்து திரும்பின

அடையாளம் கண்டு கொண்ட மகன்
ஆர்வத்தில் குதிக்க
மிரண்டு ஓடுகிறது அந்த
வளர்ந்த நாய்கள்
புரியாமல் நிற்கிறான் இவன்

வளர்ந்த பின் 
மறத்தல் இயற்கையோ
எதிர்பார்ப்புகள்
ஏமாற்றங்களின் தொடக்கமோ

கேள்விகளோடு பார்க்கிறேன்
வளர்கின்றன மகனையும்
எதிர்பார்க்கும் மனதையும்...

தூரத்தில் குரைக்கின்றன
சில நாய்கள்.