நீண்டு விரிந்து கிடக்கிறது கடல். ஒரு வித அலட்சியத்தோடு, ஆயாசத்தோடு. தினமும் மனிதர்களை கண்டு சலிப்புற்றுஇருக்கும் போல். மழை பெய்ய தயாராகிக் கொண்டிருக்கிறது வானம். மழைக்கு பயந்து மனிதன் வீடு திரும்புகிறான். வானின்கருமையும், நீலமும் தாங்கி கடல் மிக கவர்ச்சியாய் இருக்கிறது. அலைகள் அதிகம் அற்ற கடல் அது. ஒரு கரு நீல தார்சாலை போல் இருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் மழை பெய்யும். மழை நீர் கடல் நீரில் கலந்து தன் சுயம் இழக்கும். பின்சுவை இழக்கும்.
சுயம் இழத்தல் என்பது மிக கடினமான விஷயம் . எதற்காய், யாருக்காய், ஏன் என்ற பல்வேறு கேள்விகள் கேட்டு ,பின் ஒருவாறுதன்னை அறியாமலே மனிதன் சுயத்தை இழக்கிறான். மழைக்கு அந்த கவலை இல்லை. அது தாய் வீடு வந்து சேரும் பெண்போல், கடலை தழுவிக் கொள்கிறது எப்படி இருக்கிறாய் நீ என்று குசலம் விசாரித்து, பழம் கதை பேசி சிரித்து,இணக்கமாகி , - மழை எது கடல் எது என்று தெரியாதவாறு ஒரு நொடிப்பொழுதில் ஒன்றுக்குள் ஒன்றாகிறது. இதோ மழைபெய்ய ஆரம்பித்துவிட்டது. ஒரு ஆர்பரிப்பின்றி, ஓசை இன்றி, ஒரு தொழிற்சாலையின் conveyer பெல்ட்-ல் வரும் உற்பத்திபொருட்கள் போல் மேலிருந்து ஒரு நேர் வரிசையில் சீராய் பாய்கிறது. மழை மனதின் பள்ளத்தாக்குகளில் வழிந்து ஓடிநினைவின் குகைகளை முட்டி திறக்கிறது.
முன்னாரில் பனி மூட்டத்தோடு மழை பெய்த சாயந்திரத்தில் கேட்ட 'அந்தி மலை பொழிகிறது'. மழையின் குளிரும் வடா-பாவின் சூடுமாய் ரசித்த பாம்பே நாட்கள். லக்னோவின் நவம்பர் மழை. கலங்க வைத்த சென்னையின் அசுர மழை. பெங்களூரின் இரவு மழை. மழை பெய்து முடிந்த முன்னிரவு அது. கண்ணாடி ஜன்னல் வழியாய் மெர்குரி விளக்கும், விளக்கில்ஜொலிக்கும் ஆளற்ற சாலையும் வசீகரமாய் இருக்கிறது. ஜன்னல் திறக்கிறேன். சில்லென்று மழை காற்று முகம் மோதுகிறது. பெயர் தெரியா பறவை ஒன்று தனியாய் எங்கோ பறந்து செல்கிறது. எனக்கு எல்லா வேலையையும் விட்டுவிட்டு அந்தபறவையை தொடர வேண்டும் என