Search This Blog

Friday, August 1, 2014

அந்த குட்டிப் பூனையின் கண்கள் மிக அழகானவை.

அந்த குட்டிப் பூனையின்
கண்கள் மிக அழகானவை.

தொட்டால் அழுக்காகிவிடும்
வெள்ளை உடல்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
சாக்லேட் நிற கோடுகள்

வாலுக்கு மாற்றாய்
இறக்கைகள் இருப்பின்
உலகின் அழகான
பறவை இதுவாய்த்தானிருக்கும்

அந்த குட்டிப் பூனையின்
கண்கள் மிக அழகானவை

மனிதர்கள் குறித்த பயமின்றி
அந்த மருத்துவமனையெங்கும்
சுற்றி அலைகிறது அந்த பூனை

தன் முன்னங்கால்கள் கொண்டு
பெரிய கதவுகளை
தள்ளி திறக்க முயல்கிறது

நாற்காலிகள் மீதேறி
மேசைகள் தாவி
எதையும் உடைக்காமல்
கீழே குதிக்கிறது

கண்ணாடியில் தன் பிம்பம் கண்டு
உடல் சிலிர்த்து
சிரிப்பது போல்
'மியாவ்' என்கிறது

எது குறித்தும் கவலையின்றி
காற்றில் மிதப்பது போல்
நடக்கிறது அந்த பூனை

பூனையை கண்டு மிரளாமல்
நோயாளிகள் ரசிப்பது
எனக்கு மகிழ்ச்சியே

வெள்ளை சீருடைக்கும்
ஸ்டெத்தஸ்கோப்பிற்க்கும்
ஊசிகளுக்கும்
வலியின் முனல்களுக்கும் மத்தியில்
எங்கிருந்து வந்தது இந்த பூனை

ஆனால்
அந்த குட்டிப் பூனையின்
கண்கள் மிக அழகானவை

"இனி செய்வதற்கு எதுவுமில்லை
வீட்டிற்கு கூட்டிச் செல்லுங்கள் "
மருத்துவர்கள் கை விரித்தபின்
ஆம்புலன்சுக்காய் காத்திருக்கும் பொழுது கூட
அந்த குட்டி பூனையின் கண்களை தேடி அலைகிறேன்

அப்பாவின் அந்திம நாட்கள்
கழிந்த ஆஸ்பத்திரியில் இருந்த ஒரு குட்டி பூனையும்
அதன் அழகான கண்கள் மட்டுமே
எனது நினைவில்

Thursday, July 3, 2014

கொஞ்சம் அழலாம்

அழுவதற்கான காரணங்கள் 
ஏதேனும் கிடைக்கலாம் இன்று உங்களுக்கு.

மனம் நிரம்பி சிரிப்பது போல்
மனம் உடைந்து அழுவதும்
உடம்புக்கு நல்லதாய் இருக்கும் 

அவமானம்
இயலாமை 
வலி
தோல்வி
மரணம்
பயம்
பசி
பிரிவு
கோபம் -
இன்றைய கண்ணீருக்கான காரணம்
ஏதேனும் ஒன்றாய் இருக்கலாம்

உங்களுக்கும் உங்கள் கண்ணீருக்கும்
தடையாய் இருப்பது
மீசை மட்டுமெனில்
சவரம் செய்துவிட்டு அழழாம்.
அழாதிருப்பது மட்டும்
ஆண்மையல்ல.

தொண்டைக்கும் வயிற்றுக்கும்
இடையில் பூகம்பமாய் கிளம்பி
சுவாசம் திணற
கண் முழுவதும் கண்ணீரோடு
அழுது விடுங்கள் இன்றேனும்.

ஒரு பிரார்த்தனையின் மௌனமும்
ஒரு அழுகையின் விசும்பலும்
ஒரே அதிர்வைத்தான் ஏற்படுத்துகின்றன

மனமெங்கும் நிரம்பி ததும்பும் துக்கம்
கண் வழியே பொங்கி வழியட்டும்
சிறிதுநாள் காலியாய் கிடக்கட்டும் மனது
மீண்டும் துக்கம் தாங்க ஏதுவாய்.

Tuesday, June 17, 2014

இயல்பினை மீறி

எல்லோருக்கும் கேட்கிறது 
மிருதங்கத்தின் நாதம்
எனக்கு மட்டும் எங்கோ 
ஒரு மாடு கதறும் ஓசை

எல்லோருக்கும் கேட்கிறது 
புல்லாங்குழழின் கீதம்
எனக்கு மட்டும் எங்கோ 
ஒரு மூங்கில் வெட்டி வீழ்த்தப்படும் சப்தம்

எல்லோருக்கும் தெரிகிறது 
தீபாராதனையின் ஒளி
எனக்கு மட்டும் எங்கோ 
கையேந்தும் குழந்தைகளும் அலட்சியமானஇருளும் 

எல்லோருக்கும் தெரிகிறது 
அவ்வெற்றியின் குதூகலம்
எனக்கு மட்டும் எங்கோ 
மறைக்கப்பட்ட பொய்களும், மிதிக்கப்பட்டநேர்மையும்

தன்னிரக்கம் இப்படித்தான்
சிற்சில வேளைகளில்
அசிங்கமான விஸ்வரூபத்தில்

இயலாமை இப்படித்தான்
பற்பல சமயங்களில்
மயக்கும் மாரீசனாய்

உள்ளத்தின் குமுறல்
மனதின் பூட்டப்பட்ட அறை சுவர்களில்
முட்டி மோதி 
எதிரொலித்து பயமுறுத்தும்

அலைபாயும் குரங்கின் 
வால் பிடித்துச் சுழற்றி
தரையில் அடிக்க 
ஓடுகிறேன் நான்

யாரை சொல்கிறீர்கள்
பைத்தியகாரனென்று?

Sunday, April 27, 2014

நரைக்காத காதல்..




எங்கள் கிராமத்தில்.
பூட்டப்பட்டே கிடக்கிறது
அந்த வீடு
பல வருடங்களாய்

“ஏன் இந்த வீடு பூட்டியே கிடக்கிறது”
அப்பாவின் கைப்பிடித்து
அந்த வீடு கடக்கையில்
ஒவ்வொரு முறையும் கேட்பேன்.
“ஊருக்கு போயிருக்காங்க”
ஒற்றை வாக்கியத்தில் முடிப்பார் அப்பா.

வாசலில் நிற்கும் வேம்பும்
மணிகள் வைத்த கதவும்
இரட்டை திண்ணையும்
பின்பக்க மாமரத் தோட்டமுமாய்
தனித்து நிற்கிறது அந்த வீடு, மிக அழகாய்.

அந்த வீடு பற்றி கேட்டாலே
எரிந்து விழுவாள் அம்மா.

அப்பா காதலித்த பெண்
அவ்வீட்டில் இருந்ததும்,
சாதி வெறியில் ஊரார்
அக்காதல் கலைந்ததும்,
காதல் சோகத்தில்
அப்பெண் உயிர் துறந்ததும்,
மீளாத் துயரில்
அவள் பெற்றோர் ஊர் பிரிந்ததும்.
என் கல்லூரி நாட்களில் தெரிந்தது.

நரைத்த தலையும்
தடித்த கண்ணாடியுமாய்
இன்றும் அப்பா அந்த வீடு கடக்கிறார்.

ஒன்றும் கேட்காமல்
மெதுவாய் அவர் கைகளை
பற்றிக் கொண்டேன்
இறுக்கமாய் அதை பிடித்துகொண்டு
இடது கையால் கண்கள் துடைக்கிறார்

எனக்கும் அவருக்குமான
தலைமுறை இடைவெளி சுருங்கி
அவ்வீட்டின் நிழழில் விழுந்தது.

இரை விழுங்கும் பாம்பொன்று..



இரை விழுங்கும் பாம்பொன்று
மெதுவாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது அவரை.

இடுப்பு வரை பாம்பின் வாய்க்குள்ளும்
மீதி வெளியிலுமாய் அவர்.

நரைத்த தலை
இடுங்கிய கண்கள்
சுருங்கிய தேகம்
தளர்ந்த உணர்வுகள்.

பாம்பின் வயிற்றுக்குள் இருக்கும் புது உலகம் பற்றி
அவர் என்ன நினைக்கிறார் என தெரியவில்லை.

உணர்ச்சிகள் சொல்லாய் மாறாமல்
மௌனமாய் மாறி
அறையை வெப்பப்படுத்துகிறது.

எல்லோரையும் ஒரு நாள் பாம்பு விழுங்கும்
இயற்கையின் நியதி அது எனச் சொல்லி
அவரை பார்த்தபடி நகர்கிறேன்.
நானும் மற்ற அனைவரும்.

முதுமையின் நீண்ட விரல்களும்
விரல் நுனி நகமாய் மரணமும்
வளைக்கின்றன அவரை.

கண் ஓர கண்ணீர் துளியும்
கடைசி வரை சாதித்த மௌனமுமாய்
விழுங்கப்படுகிறார் அவர்.

அவர் இருந்த அறையை
நீண்ட நாட்கள் திறக்கவில்லை
பாம்புக்கும், கண்ணிருக்கும், மௌனத்திற்கும்
பயந்துகொண்டு.


13-01-2012

நீண்ட இருளின் முற்றுப்புள்ளியாய்







வார்த்தைகள்
அர்த்தங்கள் இழந்து
ஓசைகளாய் மாறுகின்றன
இழப்பின் கனத்தால்.

கனவுகள்
கூனிக் குறுகி
கரைந்து ஒழுகுகின்றன
கண் முன்னால்.

சிரிப்பும்
சந்தோஷமும்
சவமாய் கிடக்கின்றன
மௌனத்தின் கிடங்குகளில்

காடு அடர்ந்த பாதையும்
பயம் அடர்ந்த மனதுமாய்
வாழ்க்கை பயணம்.

நீண்ட இருளின்
முற்றுப்புள்ளியாய்
எங்கேனும் தெரியும்
ஓர் வெளிச்சப் பொட்டு

மொட்டொன்று பூப்பெய்தும்
நொடி போல்
சட்டென்று முடியும்
சில காத்திருத்தல்கள்.

நம்பிக்கையில்
நகர்கின்றன
நாட்கள்.


வர்ணிக்கவியலா வலி



இந்த வலியை உங்களுக்கு நான்
எப்படி புரிய வைக்கமுடியும் ?


கத்தி குத்திய உடலின் வலியா
சுத்தியல் பட்ட விரலின் வலியா
பாறையில் மோதிய தலையின் வலியா
எதேதோ கேட்கிறீர்.

எல்லா வலிகளையும்
உடல் சார்ந்த வலியோடு
எப்படி வர்ணிப்பது.

வலிமை மென்மையை ஆட்கொள்ளும்
தாக்கத்தால் எப்படி கணக்கிடுவது.

அன்பு, கடவுள், காதல்,
அற்பணிப்பு, தியாகம் என
உங்கள் உலகத்தால்
புனிதமயமாக்கப்பட்ட பல விஷயங்கள் போல்
மிகத் தூய்மையும், பழமையுமானது இந்த வலி


வீரியமிக்க வார்த்தைகளும்
பொருளடர்ந்த சொற்களும்
விளக்கிட தவறும்
இந்த வலியை.


புரிந்து கொள்ள மறுக்கும் உறவின் வலி
சட்டென்றும் விலகிவிட்ட ஸ்னேகத்தின் வலி
முகத்தில் பட்ட எச்சமாய் அவமானத்தின் வலி
சூழ்நிலையால் நேர்மை தவறிய வலி
எப்போதோ சொன்ன பொய்யின் வலி

என்னென்னவோ வகைகள் அவை.

இந்த வலியை உங்களுக்கு நான்
எப்படி புரிய வைக்கமுடியும் ?