Search This Blog

Sunday, December 30, 2012


காலை வேளைகள்
கடற்கரை மணலில்
கிளிஞ்சல்கள் பொறுக்கியபடியும்
நண்டுகள் துரத்தியபடியும்
மகனோடு கழிந்தன.

குளக்கரை எருமையாய்
மதியங்கள் கரைந்தன
நீச்சல் தொட்டிகளில்.

சோப்பு பெட்டி உடையும்
குளிர் கண்ணாடியுமாய்
பெண்கள் பார்க்க
வயது குறைந்து வழிந்தது

இளையராஜாவும்
தொஸ்தாவெஸ்கியும்
இரவுகளை ஆக்ரமிக்க
கொஞ்சம் வோட்காவுடன் கொண்டாடினேன்
அந்த கூடலையும்.

படிக்காத புத்தகங்கள்
கேட்காத இசை
ரசிக்காத இயற்கை
அணைக்காத குடும்பம்…

முடிந்தது விடுமுறை.

ஆயுதங்கள் தாங்கி
நாளை மீண்டும் செல்வேன்
கார்பொரேட் காட்டுக்குள்

வேட்டைகள் தொடரும்.
வெறும் வாழ்தலுக்காய்.

Tuesday, November 27, 2012

சொல்ல முடியாத துயரங்களாலும்
காண்பிக்க முடியாத கோபங்களாலும்
வர்ணிக்கப்படுகிறது
வாழ்க்கையின் நிறைய பக்கங்கள்.

Thursday, November 22, 2012

அறியாத நாட்களில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
கால் சுவடு பதித்தேன்
அந்த ஈர மனதில்.

காலங்கள் ஓட
ஈரங்கள் காய்ந்து
சுவடுகள் மறையும்.

மிஞ்சிய நினைவுகள் கசிந்தொழுகி
ஈரமாக்கிய மனதில்
பின்னொரு நாளொன்றில்
மெதுவாய் புலப்படும்
சில வண்ணச் சுவடுகள்.

முற்றுப்பெறா கவிதைகள்தான்
முழு அர்த்தங்கள் தருகின்றனவோ?!

Saturday, November 17, 2012



உன்னோடு பேசுவதற்கான விஷயங்கள்
எல்லையற்று விரிகின்றது.

கிரீசின் பொருளாதார வீழ்ச்சி
அமெரிக்க வெளியுறவு கொள்கைகள்
தலித் அமைப்பின் முரண்பாடுகள்
பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகள்
பாப்லொ நெருடா, பாரதி, மணிரத்னம்
கடல் அலைகள் பார்த்தபடி எதேதோ பேசி
அவன் மண் தட்டி புறப்படுகையில்
சொல்லத் தோன்றும் 
"என்னென்னவோ படிக்கிறாய்
என் எண்ணங்கள் தவிர".

நிராகரிப்பின் பயங்கள்
தொண்டைக்குள் விலங்காய்.

காதலை
சொல்லிக் கொல்லவா
சொல்லாமல் செல்லவா.

தொடுவான நிலவும்
தொட்டுச் செல்லும் அலைகள் பார்த்தபடி
சொல்வதற்கான் நாளை நாளையாக்கி
சொல்லாமல் செல்கிறேன்
என் காதலை என்னோடு எடுத்துக்கொண்டு.


Sunday, November 4, 2012

முதுமையில் தனிமை





புதைக்கப்பட்ட உணர்வுகளும்
புதைகுழி வார்த்தைகளுமாய்
நிற்பதையே இலக்காக்கி நகர்கிறது
இந்த முதிய கடிகாரத்தின் முட்கள்.

Friday, October 26, 2012

தலையில் 
தீ வைத்துக்கொண்ட 
சர வெடியின்
படபடப்பாய்
மனமெங்கும் பரவுது
உன் பிரிவின் வலி

Sunday, October 14, 2012




இங்கு சரியென்றும் தவறென்றும்
எதுவும் இருப்பதாய்
தெரியவில்லை எனக்கு

பார்க்கின்ற பார்வைகளும்
இருக்கின்ற இடங்களும்
நிர்ணயிக்கின்றன
சரி தவறுகளை

சில சரியான தவறுகளும்
சில தவறான சரிகளும்
கவனிக்கப்படாமல்
நித்தம் நடக்கின்றன

உங்கள்
சரிக்கும் தவறுக்கும்
இடையிலான
மெல்லிய கோட்டில்
பயணிக்கிறேன் நான்.

விழும் வரை சரியானவனாகவும்
விழுந்த பின் தவறானவனாகவும்
கணிப்பீர்கள் என்னை.

என் பயணத்தின் இனிமையை
ரசித்தபடி நடக்கிறேன்
விழுவதும் எழுவதும்தான்
என் பயணம்.

Tuesday, October 2, 2012

என் அன்பின் ஆழம்
உனக்கு புரிகின்ற தினமொன்றில்
நான் வலிகளற்றிருப்பேன்.
என்னை தொடுவதற்கு 
நீ வழிகளற்றிருப்பாய்.

வயிறு வீங்கி
ஏழெட்டு குட்டிகள்
ஈன்றன அந்த தெரு நாய்

குட்டி நாய்களின்
சத்தமும், அதன் அசிங்கங்களும்
முகம் சுளிக்க வைத்தன 
அடுக்கு மாடி குடியிருப்பின்
மத்தியமர்களை

எங்கேனும் அதன் மீது
வாகனம் ஏறி விடுமோ
என்ற பயத்தோடு பார்பேன் நான்

மரத்தடியில் 
ஒரு அட்டை பெட்டி வீட்டில்
அடைக்கலமாகின நாய்கள்

மீந்த தயிர் சாதம்
கெட்டுப் போன பால்
அவ்வப்போது கிடைக்கும் வறுக்கி
நாளொரு வலியும் பொழுதொரு அடியுமாய்
வளர்ந்தன அந்த நாய்கள்

இறந்தது போக
மிஞ்சிய நாய்களுக்கு
ஆங்கில பெயர் வைத்தான் 
என் நாலு வயது மகன்

காம்ப்ளான், முந்திரி, கைமுறுக்கு
கையில் கிடைப்பவை அனைத்தும்
நாய்களுக்கு பங்கு

பள்ளி செல்கையில் 
நாய்களுக்கு கையசைப்பதும்
பள்ளி முடிந்தபின்
நாய்களிடம் பேசுவதுமாய்
நாட்கள் கழிந்தன அவனுக்கு

மழை நாட்களில்
நாய்கள் பற்றிய கவலையோடு
ஆளில்லாத  பகலொன்றில்
படுக்கையறையில் நாய்கள்
கூட்டி வந்து உறங்கினான்

வேகமாய் வளர்ந்த நாய்கள்
தெரு விட்டு தெரு சென்று
பல நாட்கள் கழித்து திரும்பின

அடையாளம் கண்டு கொண்ட மகன்
ஆர்வத்தில் குதிக்க
மிரண்டு ஓடுகிறது அந்த
வளர்ந்த நாய்கள்
புரியாமல் நிற்கிறான் இவன்

வளர்ந்த பின் 
மறத்தல் இயற்கையோ
எதிர்பார்ப்புகள்
ஏமாற்றங்களின் தொடக்கமோ

கேள்விகளோடு பார்க்கிறேன்
வளர்கின்றன மகனையும்
எதிர்பார்க்கும் மனதையும்...

தூரத்தில் குரைக்கின்றன
சில நாய்கள்.




Saturday, September 8, 2012




பேசுவதற்கு விஷயங்கள் அற்று
மௌனத்தில் நகர்கிறது வாழ்க்கை

கனத்த மௌனத்தின் இரைச்சலில்
வெறுமை படர்கிறது மனதெங்கும்.

திருமணத்தால் கொல்லப்பட்டு
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மரித்துக் கிடக்கிறது காதல்

வாதங்கள் விவாதங்களாய் மாறி
சண்டைகளில் சரணடைகின்றன

எல்லா சண்டைகளும்
காமக் கல்லறையில் சவங்களாய்.

பாம்பின் சட்டையாய்
கழற்றி எறியப்படுகின்றன
கோட்பாடுகள், வலிகளின்றி.

வாழ்க்கை நகர்கிறது
விருப்புக்கும் வெறுப்புக்கும்
இடையிலான கோட்டில்.

Saturday, September 1, 2012

உடைவாள் தரித்த புத்தர்கள்

புத்தனின் தவம் போல்
சஞ்சலமற்று
மோனத்தில் லயித்திருக்கும்
அந்த குளத்தின் மீன்கள்

எப்போதெனும் வருகின்ற
ஈட்டி வாய் கொக்குகளையும்
அவ்வப்போது வருகின்ற
தூண்டில் மீன் மனிதர்களையும் தாண்டி
குளத்து மீன்களுக்கு பயமொன்றுமில்லை

மேலும் கீழும்
மேடும் பள்ளமும்
விழுந்து புரண்டு
தெறித்துச் சிதறும்
அந்த காட்டாற்றுக்குள்ளும்
மீன்கள் உண்டு

கண் மூடித் திறக்கையில்
பாறையில் மோதலாம்
ஏதெனும் பெரிய மீன்களின் 
வாய்களுக்குள் இரையாகலாம்
எங்கேனும் ஒரு புதைகுழியில்
மரணம் நிகழலாம்
வலை விரிக்கும் மீனவர் தட்டில்
இரவு விருந்தின் குழம்பாய் மாறலாம்

இடதும் வலதுமாய்
பிரிகின்ற வாழ்க்கை

குளக்கரையா காட்டாறா

மவுனத்தின் தழுவலா
மரணத்தின் முத்தமா


மீன்கள் 
குளத்தின் நினைவாய் ஆற்றிலும்
ஆற்றின் நினைவாய் குளத்திலும்

உடைவாள் தரித்த புத்தர்களும்
காவி உடையோடு கர்ணர்களும்
சிரித்தபடி இருக்கின்றனர்

முரண்பாடு அச்சாணியில்
உலகம் சுற்றிக் கொண்டே இருக்கிறது

Wednesday, August 29, 2012

கரைகின்ற கரைகள்

எகிறிக் குதித்து
கதறி அழுது
கட்டி அணைத்து
கரைகளை
அழைத்துக் கொண்டே
இருக்கிறது அலைகள்

விட்டுத் தொலைத்து
விலகி நடந்து
அலைகளோடு இணக்கமாக
கரைகளுக்கென்னவோ ஆசைதான்
நிலமென்னும் பந்தம்
இடையில் நிற்கும்

கரைதனில் 
கரம் வைத்துப் பார்க்க
அலைகளின் துளிகள்
அலைகளை 
அலசிப் பார்க்க
கரைகளின் துகள்கள்

ஒன்றுக்கொள் ஒன்றாய்
கலந்த பின்னும்
ஒட்டாது நிற்கும்
கரைகளும் அலைகளும்

அலைகளின் அழுகை
துவர்ப்பாய் மாற்றியது கடலை

இயற்கையின் நியதியால்
சேராது நிற்கும்
கரைகளும் அலைகளும்
ஆண்டாண்டு காலமாய்

கரைகளின் தலை மேல் கால் வைத்து
அலைகளின் கைகளை மிதிக்கிறான்
மனிதன் 
சிரித்துக்கொண்டே.


Friday, August 17, 2012

குழந்தையும் தெய்வமும்...


இறைவா…இறைவா
என்செய நினைத்தாய்
எமது குழந்தைகளை.

பூப்பதற்கு முன்னால்
எதற்கு பறிக்கிறாய்
இந்த பிஞ்சுகளை

உனது பன்னிரு முகங்கள்
பல்லாயிரம் விழிகள் கொண்டு
சற்றே உற்றுப்பார்

எடுப்பதற்கும் பறிப்பதற்கும்
ஆயிரம் உண்டிங்கு
உதவாக்கரை உயிர்கள்

களைவதற்கும் கொய்வதற்கும்
இந்த மலராத பூக்கள்
எதற்கு உனக்கு

அக்கினியை அனுப்பி
மொத்தமாய் பொசுக்குவதும்
வாழைப்பழத்தினால்
வாயை அடைப்பதும்
ஓடும் பேருந்தில்
ஓட்டைகள் விழுவதும்
நீச்சல் குளத்தில்
ஜலசமாதி நிகழ்வதும்

இன்னும்
எத்தனை குழந்தைகள்
வேண்டும் உனக்கு

உமது குழந்தைகள்
ஞானப்பழத்திற்காய் உலகம் சுற்ற
எமது குழந்தைகள்
வாழைப்பழத்தினால் உலகம் துறப்பதா

இவைகளும் உனது திருவிளையாடல் எனில்
சற்றே நிறுத்திக்கொள்
உனது அசட்டு விளையாட்டை

written after the various freaky accidents involving the killing of school kids in chennai - 17/08/2012...

Wednesday, July 25, 2012

சொல்லப்படாத சொற்களில்
நிரம்பி வழிகிறது
ஒளிந்திருக்கும் உண்மைகள்...


Sunday, July 22, 2012

உடைந்த கண்ணாடியின்
சிதறிய சில்லுகளாய்
அறையெங்கும் தெறித்துக்கிடக்கிறது 
மனதின் ரணங்கள்

உடலின் குரலும்
உள்ளத்தின் தவிப்பும்
மீண்டும் மீண்டும் ஓடச்செய்கிறது
காதல் தேடி

காதலின் கசப்புகள்
அடி நாக்கில்.
எச்சிலும் காதலும் 
ஒன்றாய் வெளியே துப்பி
வெறுமை விலங்கோடு நகர்கிறேன்.

சிதறிய சில்லுகளை
பெருக்கித் துடைக்க
சுத்தமாகிறது மனதின் அறைகள்.

கண் மூடி அமர்கிறேன்.

மிண்டும் கேட்கிறது எங்கோ
கண்ணாடி உடைகின்ற ஓசையும்
சில்லுகள் சிதறும் சப்தமும்.

20-7-12
புத்தி வலதும்
மனது இடதுமாய்
வாழ்க்கை தடத்தில்.
தொடர்கின்றன
இலக்கில்லா பயணங்கள்.

22-7-2012

Wednesday, July 11, 2012

சொல்ல மறைத்த காதல்களும்
சொல்லி மரித்த காதல்களும்
உறங்காத பிணங்களாய் காத்திருக்கும்
சவப்பெட்டி மனதிற்குள்.
உயிர்த்தெழும் நாளொன்றுக்காய்.

Saturday, June 9, 2012


Ladies version of Venam macham Venam

வஞ்சரம் மீனு வவ்வாலு கிடைச்சா கெலுத்தி விராலு
இருக்கு மீசை யெராலு...இறங்கி கலக்கு கொபாலு
வஞ்சரம் மீனு வவ்வாலு கிடைச்சா கெலுத்தி விராலு
இருக்கு மீசை யெராலு...இறங்கி கலக்கு கொபாலு

வேணாம் பொண்ணே வேணாம் இந்த பசங்க காதலு
பேசி பழகி பாத்தா இங்க மிஞ்சும் மோதலு
வேணாம் பொண்ணே வேணாம் இந்த பசங்க காதலு
பேசி பழகி பாத்தா இங்க மிஞ்சும் மோதலு
க்வாட்டுருக்கு தேவை ஒரு பாக்கட் வாட்டரு
பசங்களுக்கு காதல் சும்மா சப்ப மேட்டரு
கல்லு மேல தண்ணி ஊத்தி வளக்க பாத்தேனே - நானும்
முள்ளு மேல கால வச்சு வளைக்க பாத்தேனே
கல்லு மேல தண்ணி ஊத்தி வளக்க பாத்தேனே - நானும்
முள்ளு மேல கால வச்சு வளைக்க பாத்தேனே
சிக்சு… பேக்கு வச்ச லவ்வர் வேணாண்டி - நமக்கு
ஹேண்ட் பேக்கு வாங்கி தரும் ஹஸ்பண்ட் போதுண்டி

வஞ்சரம் மீனு வவ்வாலு கிடைச்சா கெலுத்தி விராலு
இருக்கு மீசை யெராலு...இறங்கி கலக்கு கொபாலு
வஞ்சரம் மீனு வவ்வாலு கிடைச்சா கெலுத்தி விராலு
இருக்கு மீசை யெராலு...இறங்கி கலக்கு கொபாலு

கண்ணே மணியேன்னு கவிதை சொன்னான்
முன்னே நிக்காம மறஞ்சு போனான்.
காதலுக்கு கண்ணில்ல சொல்லியாச்சு
காலு மட்டும் இருக்கும் போல ஓடிப்போச்சு
கண்ணே மணியேன்னு கவிதை சொன்னான்
முன்னே நிக்காம மறஞ்சு போனான்.
காதலுக்கு கண்ணில்ல சொல்லியாச்சு
காலு மட்டும் இருக்கும் போல ஓடிப்போச்சு

காதலுச்சு பாரு அது ரொம்ப படு போரு - உன்
தோலுக்குதான் ஆசை அட வேற என்ன பேச..
அவன் போனதுதான் போனான்
ஏன் குரலை திருடி போனான் -நான்
போகும்போது சத்தம் போட்டு அழுதிடுவேனா?
லவ்வரு லிப்ஸ்டிக் மாதிரி
ஜனக்கு ஜனக்கு வவ்வாலு
நட்பு சிம்மு மாதிரி
ஜனக்கு ஜனக்கு கோபாலு
லவ்வரு லிப்ஸ்டிக் மாதிரி
ஒடஞ்சா ஒண்ணும் நோவாது
நட்பு சிம்மு மாதிரி
தொலஞ்சா வேலை ஓடாது

வேணாம் பொண்ணே வேணாம் இந்த பசங்க காதலு
பேசி பழகி பாத்தா இங்க மிஞ்சும் மோதலு
க்வாட்டுருக்கு தேவை ஒரு பாக்கட் வாட்டரு
பசங்களுக்கு காதல் சும்மா சப்ப மேட்டரு

முடிஞ்சு போன பஸ் பாஸ் போல
கசக்கிப் போட்டு மறந்து போனான்
பரிட்சையில் வந்த கேள்வி போல
பதிலின்றி ஒத்தயா போறேன் புள்ள
ஆம்பளைங்க தொல்ல
இனி நமக்கு வேணாம் புள்ள
யாரும் இல்ல நம்ப
சும்மா வாங்காதம்மா வம்ப
அவன் போனதுதான் போனான்
ஏன் உயிர திருடி போனான் - நான்
உயிரிருந்தா எங்காவது தொலச்சிடுவேனா

நெருஞ்சி முள்ளா குத்துது மனச தீயா தைக்குது
காதல் பொய்யா மாறுது வாழ்க்கை சாயம் போகுது
நெருஞ்சி முள்ளா குத்துது மனச தீயா தீயய்யா
காதல் பொய்யா மாறுது வாழ்க்கை சாயம் சாயய்யா..

வேணாம் பொண்ணே வேணாம் இந்த பசங்க காதலு
பேசி பழகி பாத்தா இங்க மிஞ்சும் மோதலு
க்வாட்டுருக்கு தேவை ஒரு பாக்கட் வாட்டரு
பசங்களுக்கு காதல் சும்மா சப்ப மேட்டரு
கல்லு மேல தண்ணி ஊத்தி வளக்க பாத்தேனே - நானும்
முள்ளு மேல கால வச்சு வளைக்க பாத்தேனே
கல்லு மேல தண்ணி ஊத்தி வளக்க பாத்தேனே - நானும்
முள்ளு மேல கால வச்சு வளைக்க பாத்தேனே
சிக்சு… பேக்கு வச்ச லவ்வர் வேணாண்டி - நமக்கு
ஹேண்ட் பேக்கு வாங்கி தரும் ஹஸ்பண்ட் போதுண்டி

Friday, May 18, 2012

உறைந்துபோன பனிக்கட்டிக்குள்
ஒளிந்திருக்கும் மீன்குட்டி.
சொல்லாத காதல்.

Saturday, May 12, 2012

அம்மா...

அம்மாவிற்கும் அன்பிற்கும் பெரிதாய்
வித்தியாசங்கள் எதுவும் இல்லை
கடைசியிலுள்ள இரெண்டெழுத்து தவிர.

குழந்தைகள் வளர்ந்துகொண்டே 
அம்மாவை மறந்தபடி இருக்கிறார்கள்
அம்மா அம்மாவாகவே 
குழந்தைகளை நினைத்தபடி இருக்கிறாள்

குழந்தைகள் நதியினைப் போல்
பேரிரைச்சலோடு ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்
அம்மா குளத்தினைப் போல்
அமைதியாக ஒரே இடத்தில் இருக்கிறாள்

ஓடும் நதிகள் கடலில் கலந்து
சுயங்கள் இழக்கின்றன
தண்ணீர் வற்றினாலும்
குளங்கள் குளங்களாகவே இருக்கின்றன.

குழந்தைகளுக்காய் அம்மாக்கள் 
தரிக்காத வேடங்களே இல்லை.

பசிக்கின்ற வேளைகளில் சமையல்காரியாய்
வலிக்கின்ற வேளைகளில் மருத்துவச்சியாய்
பணிவிடை வேளைகளில் சேவகியாய்
கண்ணீர் வேளைகளில் சினேகிதியாய்
அறிவுறை வேளைகளில் ஆசானாய்
யாதுமாகி நின்றாள் அம்மா.

தட்டாமலே திறந்து
கேட்காமலே கொடுத்து
அம்மா
கால்கள் முளைத்த கடவுளாய் இருக்கிறாள்
நாத்திக குழந்தைகள் 
கடவுளை நம்ப மறுத்தபடியே 
கற்கள் தொழுகின்றனர். 








Sunday, May 6, 2012

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே...






“ஏதாவது கொடு” –
முகம் சுருக்கி
செல்லமாய் கேட்கிறாய் நீ.

என்ன வேண்டும் உனக்கு?

கூடலின் போது களைய வேண்டிய உடைகளா?
அணிந்தபின் அலுத்துப் போகும் நகைகளா?

மாலையில் வாடி கசங்கும் மலர்களா?
உரசலில் உடைந்து விடும் வளையல்களா?

என்ன தரட்டும் உனக்கு?

நாம் ஒன்றாயிருந்த
நிமிடங்களின் நினைவுகளை
பரிசளித்துச் செல்கிறேன்
பத்திரமாய் வைத்துக்கொள்
அடுத்த முறை சந்திக்கும்வரை….

************************************************************





எனக்கே தெரியாமல்
எப்படி அறைந்தாய் என்னை
காதல் சிலுவையில்….
************************************************************


 

“ஏதாவது சொல்” 
முகம் சுருக்கி
செல்லமாய் கேட்கிறாய் நீ.

எதைப் பற்றி சொல்வது உன்னிடம்?

நாம் ஒன்றாயிருந்த
கவிதை நொடிகள் பற்றியா?

இதழ்களின் மூலம்
இதயம் தொட்டாயே
அதைப் பற்றியா?

என் காது மடல்களில்
கிசுகிசுத்த ரகசியங்கள் பற்றியா?

உதடுகளின் வழியாய்
உயிரை உறிஞ்சினாயே
அதைப் பற்றியா?

ஆடையும் வெட்கமும்
ஒருசேர களைந்தாயே
அதைப் பற்றியா?

என் நிறமற்ற கனவுகளுக்கு
வர்ணங்கள் தெளித்தாயே
அதைப் பற்றியா?


என் கண்கள் கட்டி
விண்ணுக்கு கூட்டிச் சென்றாயே
அதைப் பற்றியா?


எதைப் பற்றி சொல்வது உன்னிடம்?

நாம் பிரியத் தயாரான
கண்ணிர் நிமிடங்கள் பற்றியா?


உள்ளுக்குள் அழுதுகொண்டு
உதடுகளில் சிரித்தோமே
அதைப் பற்றியா?

உணர்வுகளை உன்னிடம் விடுத்து
உயிர் மட்டும் தாங்கிச் சென்றேனே
அதைப் பற்றியா?

பிரிவதென்று முடிவு செய்தபின்
நெருஞ்சி முட்களை நெஞ்சில்
விதைத்துப் போனாயே
அதைப் பற்றியா?

எதைப் பற்றி சொல்வது உன்னிடம்?
************************************************************



உணவுக்குப் பதிலாய்
மலர்களை தின்கிறாய் நீ!

பூக்களுக்குப் பதிலாய்
நட்சத்திரங்களை சூடிக் கொள்கிறாய்!

கோடை விடுமுறைகளை
நிலவில் கழிக்கிறாய்!

எங்கேனும் செல்ல
கால்களுக்கு பதிலாய்
இறக்கைகள் விரிக்கிறாய்!

வியர்வை சமயங்களில்
மின்விசிறிக்கு பதிலாய்
தென்றலை சுழல விடுகிறாய்!

உதடுகளில் மின்சாரத்தை தேக்கி
உயிருக்கு உயிரளிக்கிறாய்.

பார்ப்பவருக்கெல்லாம்
சந்தோஷங்கள் பரிசளிக்கிறாய்!

ஏதேனும் குறையெனில்
கடவுள் தோன்றி
உன்னிடம் முறையிடுகிறார்!


உண்மையைச் சொல் – யார் நீ!!!

Thursday, May 3, 2012

மனக்குளத்தில் யார் எறிந்தார்
உன் நினைவுக் கல்லை.
கிளர்ந்தெழும்புது வெறுமை அலைகள்.
மரங்களின் மெல்லிய இலைகளில்
காற்று தன் கவிதைகளை
எழுதிக் கொண்டே செல்கிறது.

கவிதைகளில் கிறங்கிய
காதல் மரங்கள்
மனிதன் படிப்பதற்காய்
இலைகள் சொரிகின்றன

காகிதங்களில் கவிதைகள்
கற்காத மனிதனா
இலைகளில் இயற்கை
ரசிக்கப் போகிறான்?

காற்று மீண்டும்
கவிதைகளுடன் அலைகிறது
மரங்கள் மீண்டும்
இலைகளுடன் அழைக்கிறது

உதிர்ந்த கவிதைகளை
பெருக்கிக்கொண்டே இருக்கிறான்
உணர்சிகளற்ற மனிதன் மட்டும்.

Saturday, April 21, 2012

உதிர்கின்ற பூக்கள்...




எனக்கும் பூக்கள் பிடிக்கும்
பறித்துச் சூட்டுவதற்கல்ல!
பார்த்து மகிழ்வதற்கு!

பூத்த வெட்கத்தில்
சிரித்துத் தலை சாய்க்கும் பூக்கள்!

கைக்கெட்டா வண்ணத்துப் பூச்சிகளை
அசையாது வசியமாக்கும் பூக்கள்!

மலர்ந்த பூக்களை
மரங்களில் பார்ப்பது அழகு!

பறிக்கப்படும் பூக்கள் எல்லாம்
மரணிக்கப்படுவதாய் படும் எனக்கு.

“பறிக்கப்படுவதற்கல்ல பூக்கள்” என
சட்டம் ஏதேனும் வரலாம் நாளை!
கற்பனை செய்தாலே கவிதை வாசம்!

பூத்துக் குலுங்கும் மரம் கொடிகள்
பூக்களின் வாசனை எங்கும் பரவும்
பூத்த பூக்கள் கொடிகளின் மேல்
உதிர்ந்த பூக்கள் பாதைகள் மேல்
அழுத்திக் காலடி வைக்க யோசிப்பான் மனிதன்
பூமித்தாய்க்கு வலிகள் குறையும்!

இயற்கையின் உற்சாகம்
மனிதனையும் பற்றிக்கொள்ளும்
வண்ணமயமாகும் உலகம்!!

கால ஓட்டத்தில்
கருத்துகள் மாறுகின்றன

இப்பொழுதும் பூக்கள் பிடிக்கிறது எனக்கு
பார்த்து மகிழ்வதற்கு மட்டுமல்ல
பறித்துக் கொடுப்பதற்கும் கூடத்தான்!

உனக்கு பூக்கள் சூடிக்கொள்ள பிடிப்பதால்
எனக்கு பூக்கள் பறிக்க பிடிக்கிறது

“உதிர்கின்ற பூக்கள் எல்லாம்
உதவாமலே போகின்றன”
ஏதேனும் உதவாக்கரை சமாதானம்
சொல்லிக்கொள்வேன் நான்
இளிக்கின்ற உள்மனதிடம்.

நொண்டி சமாதானங்கள்தான்
சில நேரங்களில்
வாழ்கையை வழி நடத்துகின்றன.

நீ சூடிக்கொள் காதலி
உனக்கு பிரியமான பூக்களை!

உன் கூந்தலில் இருப்பதுதான்
பூக்களுக்கு அழகு!!

இலக்கில்லா பயணங்கள்



 

இலக்கில்லா பயணங்கள்
இன்பம் தருபவன.

கொடுத்த வாக்குறுதிகள்
ஆற்ற வேண்டிய கடமைகள்
முடிக்க வேண்டிய வேலைகள்…
எதுவுமின்றி மெதுவாய் நகரும் பயணங்கள்!

மரங்களுக்குள் ஒளிந்துகொண்டு
தலை உயர்த்தும் மலைகள்!

பனித்துளி முத்தத்தின் மிச்சங்களோடு
வெட்கமாய் தலை சாய்க்கும் பூக்கள்!

அவசரமாய் இயங்கும் மனிதனை நோக்கி
ஏளனமாய் கூவும் பெயரறியா பறவைகள்!

கவலைகளற்று, கடந்து செல்வோருக்கு கைகாட்டும்
நட்பு புன்னகை பூண்ட சிறுவர் சிறுமியர்!

காதலி குணம் போன்று
அடிக்கடி மாறும் தட்பவெப்பம்!

சட்டென்று வயது குறைந்த ஓர் உணர்வு!
மேல்சட்டை கழற்றி எறிந்து
மான்களை துரத்தும் வேகம் மனதிற்குள்!

எல்லா இசைக்கருவிகளோடும்
ஓர் கச்சேரி உள்ளுக்குள்!
பொங்கி வழியும் இன்பம்!

நாளைய கவலைகள்
நேற்றைய துக்கங்கள்
எல்லாம் மறந்து
இன்றே வாழ்வின் கடைசி நாளாய்
கொண்டாடும் ஓர் உணர்வு!!

இலக்கில்லா பயணங்கள்
இன்பம் தருபவன.