Search This Blog

Saturday, April 21, 2012

இலக்கில்லா பயணங்கள்



 

இலக்கில்லா பயணங்கள்
இன்பம் தருபவன.

கொடுத்த வாக்குறுதிகள்
ஆற்ற வேண்டிய கடமைகள்
முடிக்க வேண்டிய வேலைகள்…
எதுவுமின்றி மெதுவாய் நகரும் பயணங்கள்!

மரங்களுக்குள் ஒளிந்துகொண்டு
தலை உயர்த்தும் மலைகள்!

பனித்துளி முத்தத்தின் மிச்சங்களோடு
வெட்கமாய் தலை சாய்க்கும் பூக்கள்!

அவசரமாய் இயங்கும் மனிதனை நோக்கி
ஏளனமாய் கூவும் பெயரறியா பறவைகள்!

கவலைகளற்று, கடந்து செல்வோருக்கு கைகாட்டும்
நட்பு புன்னகை பூண்ட சிறுவர் சிறுமியர்!

காதலி குணம் போன்று
அடிக்கடி மாறும் தட்பவெப்பம்!

சட்டென்று வயது குறைந்த ஓர் உணர்வு!
மேல்சட்டை கழற்றி எறிந்து
மான்களை துரத்தும் வேகம் மனதிற்குள்!

எல்லா இசைக்கருவிகளோடும்
ஓர் கச்சேரி உள்ளுக்குள்!
பொங்கி வழியும் இன்பம்!

நாளைய கவலைகள்
நேற்றைய துக்கங்கள்
எல்லாம் மறந்து
இன்றே வாழ்வின் கடைசி நாளாய்
கொண்டாடும் ஓர் உணர்வு!!

இலக்கில்லா பயணங்கள்
இன்பம் தருபவன.



No comments:

Post a Comment