புத்தனின் தவம் போல்
சஞ்சலமற்று
மோனத்தில் லயித்திருக்கும்
அந்த குளத்தின் மீன்கள்
எப்போதெனும் வருகின்ற
ஈட்டி வாய் கொக்குகளையும்
அவ்வப்போது வருகின்ற
தூண்டில் மீன் மனிதர்களையும் தாண்டி
குளத்து மீன்களுக்கு பயமொன்றுமில்லை
மேடும் பள்ளமும்
விழுந்து புரண்டு
தெறித்துச் சிதறும்
அந்த காட்டாற்றுக்குள்ளும்
மீன்கள் உண்டு
கண் மூடித் திறக்கையில்
பாறையில் மோதலாம்
ஏதெனும் பெரிய மீன்களின்
வாய்களுக்குள் இரையாகலாம்
எங்கேனும் ஒரு புதைகுழியில்
மரணம் நிகழலாம்
வலை விரிக்கும் மீனவர் தட்டில்
இரவு விருந்தின் குழம்பாய் மாறலாம்
இடதும் வலதுமாய்
பிரிகின்ற வாழ்க்கை
குளக்கரையா காட்டாறா
மவுனத்தின் தழுவலா
மரணத்தின் முத்தமா
மீன்கள்
குளத்தின் நினைவாய் ஆற்றிலும்
ஆற்றின் நினைவாய் குளத்திலும்
உடைவாள் தரித்த புத்தர்களும்
காவி உடையோடு கர்ணர்களும்
சிரித்தபடி இருக்கின்றனர்
முரண்பாடு அச்சாணியில்
உலகம் சுற்றிக் கொண்டே இருக்கிறது
No comments:
Post a Comment