Search This Blog

Sunday, April 16, 2017

அப்பாவின் முகங்கள்




அப்பாவின் நினைவுகள்
தூக்கத்தை குடித்து
இரவை துப்பிகொண்டிருந்தது

தீபாவளி பட்டாசுகள்
திண்பண்டங்கள்
கொண்டாட்டங்கள்
எதேனும் தவறு செய்தால்
‘சின்ன பையன் விடு’
என சொல்லும் பெருந்தன்மை.
சிறு வயதில் சந்தித்த
அன்பு முகம்

பின்னொரு நாள்
வேலை இழந்து
சட்டென்று  வாழ்க்கை திசை மாற
அப்பா அணிந்துகொண்ட
ரௌத்திர முகம்
இயலாமை முட்கள் கீறி
கோரமான கோப முகம்
வறுமை வழிந்த
வருத்த முகம்
அம்மாவை அடித்த
அசிங்க முகம்
பதினைந்து வயது மகன்
கட்டை உருவி அடிக்க நின்றபொழுது
வெட்கப்பட்ட முகம்

விபத்தொன்றில் வலிமை இழந்து
படுக்கையில் வீழ்ந்த
பலவீன முகம்

வருடங்கள் ஓட
வீட்டுக்குள் அடைபட்டு
கோபங்கள் குறைந்து
தன்னைத்தானே வருத்திக்கொண்டு
மீண்டும் வெளிப்படுத்திய
அன்பு முகம்.

மருத்துவமனையில்
இறுதி நாட்களில்
பேச முடியாமல்
வலியின் பிடியில்
கண்ணீரோடு இருந்த
கருணை முகம்.

அப்பா நண்பனாக இல்லாத கோபம்
அப்பா நல்ல தகப்பனாய் இல்லாத வெறுப்பு
அப்பா நல்ல கணவனாய் இல்லாத வருத்தம்

இத்தனை வெறுப்பும்
கோபமும் வருத்தமும்
ஒற்றை கண்ணிர் துளியில்
என்றோ கரைந்தது

அன்பின் தாள் உடைந்து
பெருக்கெடுக்கும் வேளையில்
பேச்சற்று நான்
முச்சற்று அவர்

‘என் அன்பின் ஆழம்
உனக்கு புரிகின்ற தினமொன்றில்
நான் வலிகளற்றிருப்பேன்
என்னை தொடுவதற்கு
நீ வழிகளற்றிருப்பாய்’
அப்பாவின் குரல் அறையெங்கும்

நான்
இன்று

அழப்போகிறேன்.

No comments:

Post a Comment