Search This Blog

Monday, January 16, 2017

விடாமல் பெய்யும் மழை

மழை நாட்கள் மிகவும் மனதிற்கு நெருக்கம்.
மழைக்கு முன்னான குளிர்ச்சி
வெயில் தணிந்த ஒரு இதம்
ஒரு மலரின் வாசனை சேர்ந்த மண் வாசம்

மழை வெவ்வேறு விதமாய் இருக்கிறது
அதிகாலை மழை ஒரு அற்புத சங்கீதம்
ஒரே ராகத்தில் ஒரே தாளத்தில்
ஒரு தவம் போல்
நிதானமாய் அவசரங்களின்றி

மதிய மழை ஒரு ஆச்சரியம்
வெயிலும் மழையும் கலந்து
பளபளப்பாகும் உலகம்
ஓடும் பேருந்துகளில் பட்டு
தெறிக்கும் மழைத்துளிகள்
மழைக்குள்ளே மழையாய்.
ஆரவாரமற்று
ஆனால் உலகை சற்றே நிறுத்திய
அகங்காரத்துடன்.

அந்தி மழை ஒரு கவிதை.
உலகின் அத்தனை அழகும்
அந்தி மழையில் நனைந்து
மீண்டும் பிறக்கிறது
மிக அழகாய்.
சற்றே வெயில் தோய்ந்து
சற்றே நிலவில் சாய்ந்து
குளிரும் காற்றை கட்டி அணைத்தபடி
அந்தி மழை அழகின் அடையாளம்

இரவு மழை ஒரு காதல்.
துல்லிய வானம்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நட்சத்திரங்கள்
பளீரிடும் மின்னல்
காதல் போன்று
கண்ணுக்கு தெரியாமல்
பரவிக்கிடக்கும் இருட்டு
இருட்டை பருகும் மழை
மழையை உண்ணும் இருட்டு
கலவியின் பேரானந்தம்.

மழை பெய்த அதிகாலையொன்றில்
மகன் பிறந்தான்
மழை பெய்த இரவொன்றில்
அப்பா விட்டுச் சென்றார்

மழை பெய்து கொண்டே இருக்கிறது என்னுள்.


No comments:

Post a Comment