Search This Blog

Monday, January 16, 2017

உன் வரையறைகள் எனக்கு புரிவதில்லை.
உன் விதிமுறைகள் எனக்கு பிடிப்பதில்லை.

என் புரிதலோ என் பிடித்தலோ
உனக்கு பொருட்டில்லை.

நீ நீயாக இரு
நான் நானாக இருக்கிறேன் என்கிறாய்

தெரு கடக்கையில்
சாலையில் காணும்
சாம்பல் நிற குட்டி பூனை போல்
அலட்சியமாய் நடக்கிறாய்

பெயர் தெரியா மரத்தில் பூத்த
வெள்ளை ஊதா இதழ் பூக்கள்
பார்த்தபடி நான்

நான் நானாக இருப்பதற்கு
நான் நீயாகவும் இருக்க வேண்டும்

"புல் ஷிட்" என நீ சொல்வாய் என நினைத்தேன்
மென்மையாய் சிரித்து
உன் மூன்றாவது சிகரெட்டுக்குள் மூழ்குகிறாய். .


தடங்களின்றி, தடயங்களின்றி
அடியின்றி முடிவின்றி
மறைகின்றன புகை வளையங்கள்

உன் மவுனம் கலைக்க மனமின்றி
நகர்கிறேன்

நாளையும் நீ மாறப்போவதில்லை
நானும்தான்

No comments:

Post a Comment