“ நீ மார்பில் குத்துவதைக் கூட நான் சிரித்தபடி தாங்குவேன்”
– இது ஏதோ காதலிக்கு காதலன் எழுதிய கவிதை அல்ல.
அசோக் நகர் அருகில் அண்ணன் விஜய்காந்திற்கு அன்பு தொண்டர் ஒருவர் வைத்த
பேனர். பொதுவாக பேனரின் சிறப்பம்சம் என்னவென்றால்,
அதையெல்லாம் பார்த்த உடனே பிடிக்காது. ஆனால்
பார்க்க பார்க்க பத்திக்கிட்டு வரும்.
“பொ....கிட்டு போ வேண்டியதுதானே”
என நீங்கள் கேட்பது புரிகிறது. எனினும்,
பேனர் குறித்த எனது ஆர்வம் மிக தீவிரமானது.
தமிழ்நாட்டின் பேனர் கலாச்சாரம் மற்றும் தமிழனின் பேனர் கற்பனைத்திறன்
ஆகியவை குறித்து ஒரு PHD செய்யவேண்டிய அளவுக்கு ஒரு ஆர்வக்கோளாறு ஆகிவிட்டது
இப்போது.
தங்கள் தலைவன் / தலைவியை கொண்டாடுவதில்
தமிழனுக்கு நிகர் வேறு யாரும் இல்லை. சொம்படிப்பது,
ஜல்லி அடிப்பது, ஜால்ரா அடிப்பது என வட்டாரத் தமிழில் கூறப்படும் இந்த புகழ்ச்சியணி ஹைக்குகள், தலைவன்
மற்றும் தலைவியின் பிறந்தநாள் வரும் பொழுது மிக அதிகமாக சுரக்கிறது. சங்க கால இலக்கியங்களில் இருந்தே கவிஞர்கள் இதை
செய்திருந்தாலும், இப்போதுதான் இந்த புகழ் பாடல் உச்ச நிலையை அடைந்திருக்கிறது
என்று நான் நினைக்கிறேன்.
“வாழும்
volcano-வே”, coolers அணிந்த கூர்வாளே, எண்ணூர் எரிமலையே, சின்னதாராபுரம்
சிறுத்தையே, விருகை விருட்சமே, சிரிக்கும் சிங்கமே, சன் கிளாஸ் அணிந்த Sun-னே என்று டெரர் சல்யுடேசன் கொடுப்பது பேனர்களில்
முக்கியம். அரசியல் அரிஸ்டாட்டிலே, ஐநா
சபைக்கே ஐடியா கொடுத்தவரே, சட்டசபை சாணக்கியரே என்று இன்டெலிஜென்ட் ஒபெனிங் கொடுப்பது இன்னொரு
ரகம். அண்ணனின் உண்மை ‘தெண்டர்கள்’, புரசைவாக்கம் ‘புளியே’, தங்க ‘தலபதியே’ என்று
அங்காங்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கும். அதெல்லாம் பெரிது பண்ணாமல் சப்ஜெக்டை புரிந்து
கொள்வது நமது கடமை. பேனரின் முடிவில்
முடிந்த வரை தங்களை தாங்களே பெருமிதமாய் அடிமைகள், உண்மை விசுவாசிகள்,
கிளிப்பிள்ளைகள் என்று போட்டுக்கொள்வது
ஒரு நல்ல பண்பாடு.
கையில் அலைபேசியுடன் சிரிக்கும் தலைவன் முகம் மிக
முக்கியம். பெரிய மீசை கொண்ட தலைவன் நடந்து
வரும் போஸ் என்றால், சற்றே தொடை தெரியும் அளவுக்கு வேட்டியை தூக்கி கட்டி
ராஜ்கிரண் மாதிரி ஒரு பில்ட்அப் கொடுக்கலாம்.
வட்டம், மாவட்டம் ஆகியோர் அவரது பதவிக்கேற்ப போட்டோவை மற்றும் பெயரை
பெரிதாக்கி போட்டுக் கொள்ளலாம். தலைவன்
போட்டோவை விட பெரியதானால் பதவி அம்போ. மீண்டும்
டீ ஆற்ற வேண்டியதுதான். பரங்கிமலையில் போட்டோ
எடுத்து போட்டோஷாப் செய்து பாரிசில் இருப்பது போன்று செட் அப் செய்வது ஒரு நுண்
கலை. மற்றபடி சிங்கம் சிறுத்தை போன்ற
பெட் அனிமல்ஸ் மீது அமர்ந்து நம் தலைவர்கள் தரும் போஸ் மிகச்சிறப்பு.
அடுத்த முறை பேனர் பார்த்தல் கொஞ்சம் வண்டியை
ஓரங்கட்டி கவனியுங்கள். சிரிக்க சிந்திக்க
விஷயம் கிடைக்கும்.
No comments:
Post a Comment