என் அறையின் வாசல் கதவு
வெளியே பூட்டிக் கிடக்கிறது
நான் வெளியே போவதில்லை
போகவும் பிடிப்பதில்லை
என் அறையின் ஜன்னலில்
கம்பிகள் இல்லை.
கம்பிகளில்லா ஜன்னல்
வாசல் கதவு போல்தான்
தாண்டிப் போக
பெரிய முயற்சி எதுவும் தேவையில்லை
கம்பிகளில்லா ஜன்னல் வழி
காலத்தை நசுக்கியபடி
நகரம் வேகமாய் நகர்கிறது
கருப்பு கழிவு கக்கியபடி
பேருந்துகள்
அலறும் ஓசையுடன்
ரயில் வண்டிகள்
தொங்கியபடி மனிதர்கள்
இரு சக்கர வண்டிகள்
நான்கு சக்கர வண்டிகள்
லாரிகள் குட்டி லாரிகள்
ஆட்டோக்கள் ஷேர் ஆட்டோக்கள்
மீன் பாடி வண்டிகள்
நகரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது
வீடுகள்
பெரிதும் சிறிதுமாய்
அடுக்கு மாடி குடியிருப்புகள்
பால்கனியில் காயும் உள்ளாடைகள்.
கட் அவுட்கள்
சிரிக்கும் தலைவர்கள்
நடிகர்கள் நடிகைகள்
வாக்கிங் போகும் முதியவரோடு
ஒரு [பணக்கார?] வீட்டு நாய்
அதன் பின் ஒரு தெரு நாய்
தூரத்து மின் கம்பத்தில்
இரண்டு மூன்று காக்கைகள்
ஜன்னல் கதவை மூடிவிட்டு
என் கணினியை திறக்கிறேன்.
கணினி முகப்பில்
அடர்ந்த காடும்
காட்டு வழி ஒற்றை பாதையும்
பாதையில் சிதறிக்
கிடக்கும் மஞ்சள் பூக்களுமாய்
முகப்புத் திரை
பின்புலத்தில் அருவி ஓசையும்
சில பறைவைகளின் குரலும்.
நான் வெளியில்
செல்வதில்லை.
என் அறையின் வாசல் கதவை
வெளியில் பூட்டிவிட்டு
கம்பிகளில்லா ஜன்னல் வழி
ஒரு நாள் உள்ளே வந்தேன்.
அதன் பின்
நான் வெளியில் செல்வதில்லை
போகவும் பிடிப்பதில்லை
No comments:
Post a Comment