அவனும் நானும்
ஒரே ஊர்
அவனும் நானும்
ஒரே மதம்
அவனும் நானும்
ஒரே சாதி கூட
கல்லூரி வரை
ஒரே பெஞ்ச்தான்
கில்லி தண்டா
கிரிக்கெட்
தலைவர் படம் முதல் ஷோ
மலையாள படம் கடைசி ஷோ
திருட்டு தம்
முதல் பீர்
எல்லாமே அவனோடுதான்
என் அப்பா இறந்தபோது
என்னை விட அவன் தான் அதிகம் அழுதான்.
என் பத்து வயது மகனும்
அவனது ஒன்பது வயது பையனும்
சென்ற வாரம் வரை
நெருங்கிய நண்பர்கள்
‘ஏண்டா
மாட்ட திண்ணா இந்த பயலுவ
ஏண்டா ரவுசு பண்றானுவ ‘ என்றேன் ஒரு நாள்
‘ஏன் கோழிக்கறி திண்ண வேண்டியதுதானே
இங்கன இருந்தா நாம சொல்லறத கேட்டுகிட்டு இருக்க
சொல்லு’ என்றான்
ATM-ல் பணம் வராது தவித்த நாளில்
யாரோ பிரதமரை திட்ட
‘தாயோ....ங்க’ இவனுங்க மாதிரி ஆளுங்க இருக்கையில
இந்தியா எப்டிடா முன்னேறும்’ என்றான்.
‘கட்டைல போறவன் காஷ்மீர்ல ஒரு சின்ன புள்ளய
என்ன பாடு படுத்தி கொன்னுக்கான் பாருடா ’ என்றேன் ஒரு நாள்.
‘நம்ம சாதி சனத்த நெதமும் செய்யறாய்ங்க
அதெல்லாம் உன் கண்ணுக்கு படாதோ ‘என்றான்.
‘ஏண்டா பெட்ரோல் வெல இப்பிடியே போனா
சைக்கிள்தான் போல ‘ என்றேன்.
முறைத்துவிட்டு போனான்.
பின் பேசுவதில்லை
என் பத்து வயது மகனும்
அவனது ஒன்பது வயது பையனும் கூட
சென்ற வாரம் வரை
நெருங்கிய நண்பர்கள்
மகனிடம்
என்னடா உங்களுக்கு சண்டை என்றேன்.
அப்பா என் பேரு ‘நேரு’ங்கறதால
என் கூட பேச கூடாதுன்னு அவங்கப்பா சொல்லிட்டாரு
என்றான்.
‘அதென்னவோ சரிதான்
என் பேரு முருகேசன்தானே
என்கிட்ட கூட அவங்கப்பா பேச மாட்டேங்கறானே’
No comments:
Post a Comment