Search This Blog

Friday, June 1, 2018

அந்த குட்டி பறவைக்குத் தெரியாது
யாரோ அதை புகைப்படத்துக்குள்
அடைத்துக் கொண்டிருக்கிறான் என்று
அதன் நீல நிறக் கண் ஒன்றை
மிக கூர்மையான லென்ஸ் மூலம்
உறையச் செய்யப் போகிறான் என்று
அதன் ஊதா கலந்த மஞ்சள் இறக்கைகள்
அதன் வெள்ளை மூக்கு
அதன் நீண்ட கால்கள்
என எல்லாவற்றையும் ரசிக்கிறான் என்று
அதன் படம்
உலகமெங்கும் அச்சிடப்படும் புத்தகத்தின்
முதல் பக்கத்தில் வெளிவந்து
அந்த புகைப்பட கலைஞன்
விருது பெறப்போகிறான் என்று.
அந்த குட்டிப் பறவைக்கு
அன்று ஏனோ அப்படி ஒரு தாகம்
தண்ணீருக்காய் பறந்து கலைத்து
தேடிக் கொண்டே இருக்கிறது.
‘Cheers ‘ விருது பெற்ற மகிழ்ச்சியில்
கோப்பைகள் மோத
தண்ணீரில்லா காட்டில்
தவம் கிடந்து
தான் படம் பிடித்த
குட்டிப் பறவையின்
கண்கள் குறித்து கலைஞன் சிலிர்க்கிறான்
காட்டில்
அந்த குட்டிப்பறவை
தன் நீல நீறக் கண்களால்
தண்ணீரை தேடி தேடி தேடி
கலைத்தபடி...

No comments:

Post a Comment